கோவை: மதுபானம் குறித்து திமுக மூத்த அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்த கருத்து கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கோவையில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழா, கட்சி நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இன்று (ஜூன் 30) கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 69 உயிர்களை இழந்துள்ள சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் சட்டபேரவையில் பேசும் போது ‘சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள்’ என்று மிக மோசமாக பேசியுள்ளார்.
முதல்வர் முன்னிலையில் மூத்த அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கள்ளக்குறிச்சி மட்டுமின்றி பொள்ளாச்சியிலும் அதே போன்ற நிகழ்வு நடந்ததுள்ளது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எதை நோக்கி சென்று கொண்டுள்ளது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். எது நல்ல ஆட்சி, நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
மதுபான விற்பனை குறித்து மூத்த அமைச்சர் பேசிய இந்த ஒரு சான்று போதும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு. சாரயத்துடன் ஒப்பிடுகையில் கள் உடலுக்கு நல்லது. லாபம் குறைவு என்பதால் அதன்மீது அரசு அக்கறை காட்டுவதில்லை.
மதுபான விற்பனை குறித்து முன்பு விமர்சனம் செய்த கனிமொழி இப்போது ஏன் பயப்படுகிறார்? ‘நீட்’ தொடர்பாக ஒரு நிலையான முடிவை எடுக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு மேல் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேப்டன் செய்து வந்தார். தற்போது நடிகர் விஜய் அதுபோன்ற பணிகளை செய்து வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். அரசியலில் அவரது செயல்கள் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.