MS Dhoni Instagram Post On Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. அதுமட்டுமின்றி, சுமார் 11 ஆண்டுகளாக நீடித்து வந்த ஐசிசி கோப்பை தாகத்தை ஒருவழியாக இந்திய அணி இம்முறை தீர்த்தது. 2007ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா தற்போது கைப்பற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி கடைசியாக தோனியின் (MS Dhoni) தலைமையின்கீழ் 2013இல் இங்கிலாந்தை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருந்தது. அதன்பின் பல ஐசிசி தொடரின் நாக்-அவுட் போட்டிகளில் படுதோல்வி அடைந்து பல வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறது. கடந்தாண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 என அடுத்தடுத்து இரண்டு வாய்ப்புகளை ஆஸ்திரேலியாவிடம் தவறவிட்டிருந்தது.
நிதானம் காட்டிய விராட் கோலி
ஆனால், இம்முறை இந்திய அணி கணக்கச்சிதமாக திட்டமிட்டு கோப்பையை தூக்கியுள்ளது. ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களும் தொடர் நடைபெறும் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளின் சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது.
குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் (IND vs SA Final Match) இந்தியாவின் பேட்டிங்கில் ரோஹித், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டாப் ஆர்டரில் சொதப்பினாலும் விராட் கோலி (Virat Kohli) இம்முறை அவசரப்படாமல் மிகப்பொறுமையாக விளையாடி ஒருபக்கம் விக்கெட் விழுவதை தடுத்தார். அக்சர் படேலின் அதிரடி கேமியோ இந்தியாவுக்கு கைக்கொடுத்தது. 50 ரன்களுக்கு பின்னர் கோலி கொடுத்த அந்த வேகமும் இந்தியாவை பெரிய ஸ்கோரை நோக்கி தள்ளியது.
சூர்யகுமார் பிடித்த அற்புத கேட்ச்
177 ரன்கள் இலக்கு அடிக்கக் கூடியது என்றாலும் ரீசா ஹென்றிக்ஸின் விக்கெட்டை பும்ரா அசால்டாக தூக்கி முதல் தாக்குதலை தொடுத்தார். அடுத்து மார்க்ரம் அர்ஷ்தீப் பந்துவீச்சில் காலியானார். நன்கு விளையாடி வந்த ஸ்டப்ஸ் அக்சர் பந்துவீச்சிலும், நிலைத்து நின்று விளையாடிய டி காக் 39 ரன்களில் அர்ஷ்தீப் வீசிய 13ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தார்.
அக்சர் வீசிய 15ஆவது 24 ரன்கள் குவிக்கப்பட 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது, தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு… ஆனால், பும்ரா, அர்ஷ்தீப், ஹர்திக் ஆகியோரின் சிறப்பான டெத் ஓவர்களால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஹர்திக் வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்திலும், 20ஆவது ஓவரின் முதல் பந்திலும் முறையே கிளாசென் மற்றும் மில்லரும் வீழ்ந்தனர். குறிப்பாக, மில்லரின் கேட்சை சூர்யகுமார் யாதவ் சிக்ஸ் லைனில் பிடித்தது பெரிய திருப்பமாக அமைந்தது.
தொடர் நாயகன் பும்ரா
குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே மில்லர் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு கோப்பையை உறுதி செய்தது எனலாம். அதன்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். போட்டி நிறைவடைந்ததும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
இந்நிலையில் பலரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு (India National Cricket Team) வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும், சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களும், பிரபலங்களும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தங்களின் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் வாழ்த்து பதிவு
அந்த வகையில், யாருமே எதிர்பார்க்காத இந்திய அணியின் (Team India) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இன்ஸ்டாகிராம் (MS Dhoni Instagram Post) மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பலருக்கும் அவரது வாழ்த்து பதிவு சர்ப்ரைஸாக இருந்த நிலையில், தனது பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசை அளித்ததற்கு நன்றி எனவும் தோனி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
View this post on Instagram
தோனி அவரது இன்ஸ்டா பக்கத்தில்,”உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. என் இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது, அமைதியாக இருந்து, தன்னம்பிக்கையுடன், நீங்கள் இதற்கு முன் செய்ததையே இப்போது செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு, இந்தியாவிலும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சார்பாக நன்றி… வாழ்த்துக்கள். ஹரே… விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
தோனி எப்போதும் இதுபோன்ற உணர்ச்சிகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவது குறைவு என்பதால், நள்ளிரவில் தோனி போட்ட இந்த பதிவால் குஷியில் இருக்கும் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட் ஆகும்.