பார்படாஸ்,
டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இறுதி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை இருந்தது. ஓவரின் முதல் பந்து வீசப்பட்டதும் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர், அதனை சிக்சராக மாற்ற தூக்கி அடித்தபோது, அனைவரும் அது சிக்சர் என்றே நினைத்தனர்.
ஆனால், சூர்ய குமார் ஓடி வந்து அதனை பிடித்து விட்டார். எனினும், அவர் பவுண்டரி எல்லையை கடந்து செல்ல முற்பட்டபோது, அதனை மேலே நோக்கி வீசி விட்டு, மீண்டும் பவுண்டரிக்கு உள்ளே வந்து அதனை பிடித்து மில்லரை அவுட்டாக்கினார்.
இது ஆட்டத்தில் மிக முக்கிய கட்டம். ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியா 7 ரன்களில் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது. இந்திய அணி, 17 ஆண்டுகளில் முதன்முறையாக டி20 உலக கோப்பை பட்டமும் பெற்றுள்ளது. சூர்ய குமார் கேட்ச் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.