ஈரோடு: தடை செய்யப்பட்ட அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஞாயிற்று கிழமை) சோதனை மேற்கொண்டனர்.
சட்டவிரோத செயல்பாடு காரணமாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உள்ளிட்ட 8 அமைப்புகள், ஐந்து ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்த தகவலின் பேரின், தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு பெரியார் நகர் அருகே கருப்பண்ணசாமி கோயில் வீதியில் வசித்து வரும் முகமது இசாக் (40) என்பவர் வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கொச்சியில் இருந்து இன்ஸ்பெக்டர் விஜி என்பவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகன பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வரும் முகமது இசாக், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைப்போல் ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சோதனை நடந்தது.
சென்னையில் இருந்து, இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக இவரும் சமூக வலைதளங்களில் பதிவுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. என்.ஐ.ஏ. சோதனை நடக்கும் இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.