புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27-ம் தேதி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
மக்களவையில் இந்த விவாதத்தை ரத்து செய்துவிட்டு, நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவை தலைவர் ஓம் பிர்லா இதை ஏற்காததால், இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், ஜூலை 1-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி பேசினார். அப்போது, இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்தது. மஜத தலைவர் தேவகவுடா கூறும்போது, “நீட் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்த பிறகு, நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்’’ என்றார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் கூடி கோஷமிட்டனர். அப்போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறும்போது, “எதிர்க்கட்சியினர் அவை மரபுகளை அப்பட்டமாக மீறுகின்றனர். மூத்த தலைவர் கார்கே, அவையின் மையப் பகுதியில் நின்று கோஷமிட்டது வருத்தமளிக்கிறது’’ என்றார். அமளி அதிகமானதால் பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் 2.30 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்தது.
காங்கிரஸ் பெண் எம்.பி. மயக்கம்: தொடர்ந்து கோஷம் எழுப்பிய காங்கிரஸ் பெண் எம்.பி. பூலோதேவி நேதாம் மயங்கி விழுந்ததால், ஆம்புலன்ஸ் மூலம்டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவையில் ராகுல், கார்கேவின் ஒலிபெருக்கி அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பதிவில் குற்றம்சாட்டியுள்ளது. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியபோது, ‘‘குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த மரபை மாற்ற முடியாது. நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.