அகமதாபாத்: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மனீஷ்குமார், அசுதோஷ் குமார் ஆகிய இருவரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. நீட் தேர்வுக்கு முந்தைய நாள் இவர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கி அவர்களுக்கு வினாத்தாள் மற்றும்விடைகள் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐஇதுவரை 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் நகரில் உள்ள ஓயாசிஸ்பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் எசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களில் இசானுல் ஹக்,ஹசாரிபாக் மாவட்ட நீட் தேர்வுஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இம்தியாஸ் ஆலம்,ஓயாசிஸ் பள்ளி தேர்வு மைய ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய தேர்வு முகமையின் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் முறைகேட்டில் உதவியதாக ஜமாலுதீன் என்ற பத்திரிகை யாளரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர் பிரபாத் கபார் என்ற இந்தி செய்தித்தாளில் பணியாற்றி வந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர வினாத்தாள் கசிவு தொடர்பாக ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரிடம் சிபிஐஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஆனந்த், கேதா, அகமதாபாத், கோத்ரா ஆகிய 4 மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது. பள்ளி முதல்வர் மற்றும் துணைமுதல்வரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ராஜஸ்தானில் உள்ள ஜாலாவர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் சிலருக்கும் நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி மற்றும் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் அந்த மருத்துவக் கல்லூரிக்குச் சென்றனர். இதையடுத்து 10 மாணவர்களை நேற்று முன்தினம் பிடித்துச் சென்றனர். இதனை கல்லூரி டீன் சுபாஷ் சந்திர ஜெயின் உறுதிப்படுத்தினார்.
இந்த மாணவர்களிடம் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.