திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் தீர்மானம் போட்டு ஓராண்டாகியும், புதுமை பித்தனுக்கு சிலை அமைக்கப்படாமல் இருப்பது எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலிக்குப் பெருமை சேர்த்த தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் 76-வது நினைவு நாள் நாளை (ஜூன் 30) அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு நினைவு சின்னம் எழுப்பும் வகையில், பாளையங்கோட்டை மேலக்கோட்டை வாசல் பூங்காவில் அவருக்கு மார்பளவுச் சிலை எழுப்ப திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அவருக்கு சிலை அமைக்கப்படவில்லை. இதனால் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலை இலக்கிய அன்பர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், “விருத்தாசலம் என்ற இயற்பெயரைக்கொண்ட புதுமைப்பித்தன் பிறந்தது திருப்பாதிரிப்புலியூர் என்றாலும், பூர்விகம் தாமிரபரணி பாயும் திருநெல்வேலி தான். அவரது கதை மாந்தர்கள் திருநெல்வேலி வட்டார வழக்கில் தான் பேசுவார்கள். ‘சவத்து மூதிய விட்டுத் தள்ளுங்க’ என்று இயல்பாய் பேசுவதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத்தில் பதிவு செய்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் சிறுகதை தவழும் பருவத்தில் இருந்தது.
ஐரோப்பிய இலக்கிய வடிவமான சிறுகதையை இந்திய மரபிற்கேற்ப எழுதியவர் புதுமைபித்தன். சிறுகதை இலக்கியத்தில் பல்வேறு சோதனை முயற்சிகளைக் கையாண்டவர் அவர். அக்காலத்தில் வெளிவந்த ‘மணிக்கொடி’ இதழில் அவரது பல சிறுகதைகள் வெளிவந்தன. அவர் எழுதிய முதல் சிறுகதையான ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ படித்தாலே அவரது கலை மேதைமையைப் புரிந்து கொள்ள இயலும். நூற்றுச் சொச்சம் சிறுகதைகள் மட்டுமே எழுதி தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு பெருவளம் சேர்த்துள்ளார். சிறுகதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ளார்.
அவரது ‘பாசிஸ்ட் ஜடாமுனி’, ‘கப்சிப் தர்பார்’ போன்ற அரசியல் கட்டுரை நூல்கள் பிரபலமானவை. புதுமைப்பித்தனின் எள்ளல் நடை வித்தியாசமானது. தமிழில் அது புது வகையான எழுத்து முறை. சிவபெருமான் பூலோகத்திற்கு வருவது போல எழுதப்பட்ட கதை ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’. கந்தசாமியின் ஒரே குழந்தையான பத்து வயது சிறுமியை கடவுள் உற்றுப் பார்ப்பார்.
கந்தசாமிப் பிள்ளை தயங்கி நிற்பார். அப்போது சிவபெருமான் ‘இப்போதெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானை சமையல்தான் பிடிக்கும். பால், தயிர் கூட சேர்த்துக் கொள்வதில்லை’ என்று சிரிப்பார். இரண்டு வரிகளுக்கிடையே சிறுத்தொண்டர் புராணத்தையே சூசகமாய் வாசகனுக்கு கடத்துவார் புதுமைப்பித்தன்.
உலகத்தரத்தில் அமைந்த அவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி பேராச்சி அம்மன் கோயில் படித்துறையில் அமர்ந்து பல சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது கதைகளில் பேராச்சி அம்மன், சுலோச்சனா முதலியார் பாலம், கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம், சிந்துபூந்துறை படித்துறை, குட்டந்துறை என எல்லாவற்றையும் பார்க்கலாம்.
திருநெல்வேலிக்கு பெருமை சேர்ந்த அவரது 76-வது நினைவு நாள் நாளை (ஜூன் 30) அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது மார்பளவு சிலை அமைக்க திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை சிலை அமைக்கப்படவில்லை. இது தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நெல்லைக்காரர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.