“புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்…” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் நீதிபதியாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 685 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன்.
பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோது எத்தனை வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன் என்பது தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அது பல அலைகளை ஏற்படுத்தியது. பலர் அதனை ரசிக்கவில்லை.
என் பார்வையில் நீதிபதிகள் உட்பட பொதுமக்களுக்கான பதவியில் இருக்கும் அனைவருமே பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். நீதிபதிகள் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, 6 ஆண்டுகள் 8 மாதங்கள் பணியாற்றிய நிலையில் 95 ஆயிரத்து 607 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். அது தொடர்பான விவரங்களை அறிந்தபோது, இதர வழக்குகளையும் சேர்த்து மொத்தம் 95 ஆயிரத்து 607 வழக்குகளுக்கு அவர் தீர்வு கண்டது தெரியவந்தது.
அந்த அடிப்படையில் நான் தீர்வு கண்ட இதர வழக்குகளையும் சேர்த்தால் மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 685 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். இருப்பினும், முக்கிய வழக்குகளில் தீர்வு காண்பதுதான் முக்கியம் என கருதுகிறேன்.
என்னுடைய பல வழக்குகளின் உத்தரவுகள் தொடர்ச்சியானவை. சமீபமாக நீதிபதி சேஷசாயின் வழக்கு ஒன்றின் தீர்ப்பைப் பார்த்தேன். 72 பக்கங்களை கொண்ட அந்த தீர்ப்பு என்னுடைய ஆயிரம் உத்தரவுகளுக்கு சமமானது.
பட்டியலிடப்படும் வழக்குகளின் தன்மையே முடிவின் வேகத்தையும் நிர்ணயம் செய்கிறது. இன்னும் 6 ஆண்டுகள் பணி காலம் உள்ள நிலையில், எதுவும் நமது கையில் இல்லை. என்னோடு ஐந்து நீதிபதிகள் ஒரே நேரத்தில் பொறுப்பேற்றனர். அதில் ஒருவரான நீதிபதி ஆதிகேசவலு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தித்து வருகிறேன். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை பற்றி நாம் நன்கு அறிந்திருந்தாலும், இன்னமும் திட்டமிட்டு வருகிறோம். அதற்கு நானும் விதிவிலக்கல்ல.
எந்த நீதிபதியும் தனக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்வார்கள். சிலருக்கு கூடுதல் புலன் உணர்வு இருக்கும். அதன் அடிப்படையில் உள்ளுணர்வு மூலம் அணுகுவார்கள்.
நான் ஒவ்வொரு வழக்கிலும் மனுதாரரையும், வழக்கறிஞரையும் சந்தேகத்துடன் பார்க்க விரும்பவில்லை. ஆகவே மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவும், வாதங்களை முன் வைப்பதற்கு முன்பாகவும் அதனை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வழக்கறிஞர் நீதிபதியின் நம்பிக்கையை இழந்துவிட்டால் அவரது தொழிலுக்கு ஆபத்தாகிவிடும். வழக்கறிஞர் நீதிமன்றத்தில் என்னை ஏமாற்றினால், அது குறித்து கருத்தாகவோ, புகாராகவோ சக நீதிபதிகளுடன் கூற கடமைப்பட்டுள்ளேன். அதை அவர் அவரது நண்பர்களிடம் தெரிவிப்பார்.
பாவம் புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன். உங்களால் நான் தவறாக வழி நடத்தப்பட்டால், தவறான தீர்ப்பை நான் வழங்கினால் என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்.
நீதிபதியின் கோபம் தற்காலிகமானது. உங்களின் நோக்கம் புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.
டிஜிட்டல் ரிப்போர்ட்டிங் காரணமாக ஒவ்வொரு உத்தரவும் பதிவு செய்யப்படுகிறது. வழக்கறிஞர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க விரும்புகிறேன்.
மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக, இதற்கு முன்பாக இது தொடர்பான வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா? சரியான நபர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனரா? வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறையாக உள்ளதா? இவை அனைத்தையும் வழக்கறிஞர் உறுதி செய்ய வேண்டும்.
சில நேரங்களில் நான் என் பொறுமையை இழந்து விடுகிறேன். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு வழக்கறிஞர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு இளம் வழக்கறிஞரிடன் கடுமையாக நடந்துகொண்டதால், அவரை தனியாக அழைத்து வருத்தம் தெரிவித்ததற்கு, நன்றாக என்னை திட்டுங்கள் என்றார். ஓய்வுபெறும்போது ஒரு வழக்கறிஞரைம் காயப்படுத்தவில்லை என கூற விரும்புகிறேன்.
நான் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பை கேட்கிறேன். உங்களின் வாழ்த்துகளோடு 8 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதை விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.