சேர, சோழ, பாண்டியர் ராஜாக்கள் காலத்தில் மூவேந்தர்களின் எல்லைகளின் இடையில் `மய்யமாக’ இருந்த கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மணவாசியில் அமைந்துள்ளது மத்திய புரீஸ்வரர் ஆலயம். அதோடு, பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த சிவன் கோயில், மேற்கு நோக்கிய தலமாக அமைந்துள்ளது.
சுயம்புலிங்கமாக அமைந்திருக்கும் சுவாமியின் இடதுபுறம் அம்பாளும், வலதுபுறம் மத்தியபுரீஸ்வரரும் தெரிவது அற்புதம். உடனுறையாக கோமளவள்ளி தாயார் வீற்றிருக்கிறார். காசிக்குச் சென்று அங்குள்ள சிவனை வணங்குவதைவிட, இந்த மத்தியபுரீஸ்வரை வணங்கினால் மேலதிக பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். தனக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த மிருகண்ட மகரிஷி முனிவர், இந்த மத்தியபுரீஸ்வரர் பற்றிக் கேள்வியுற்று இங்கே வந்திருக்கிறார்.
சிவனை வேண்டித் தவமிருந்தார். முனிவரின் கடுந்தவத்தைப் பாத்த சிவனும், அவருக்கு உடனடியாகப் புத்திர பாக்கியம் கிடைக்க வழிசெய்யும் வரத்தை அருளினார். அதன்காரணமாக, மிருகண்ட மகரிஷிக்கு மகனாக மார்க்கண்டேயர் பிறந்தார். இந்தக் கோயிலுக்கு முன்பு உள்ள கல் ஸ்தூபியில் மிருகண்ட மகரிஷி கையில் கமண்டலத்துடன் சிவனைப் பார்த்தவண்ணம் இருக்கிறார். அதேபோல், புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த கோனகிரி ராஜா என்பவரும், மத்தியபுரீஸ்வரரைத் தொடர்ந்து வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றார் என்று சொல்கிறது ஸ்தல வரலாறு.
இதனால், குழந்தை பேறு வழங்கும் அற்புதம் நிகழ்த்தும் ஸ்தலமாக இது விளங்குகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயில் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாகக் குடமுழுக்கு வைபவம் காணாமல் இருந்தது. ஆன்மிக அன்பர்களாலும், சிவபக்தர்களாலும் கோயில் புனரமைக்கப்பட்டு நூறாண்டுகள் கழித்து வரும் 1- ம் தேதி, திங்கட்கிழமை குடமுழுக்கு நிகழ இருக்கிறது.
இந்தக் கோயிலின் சிறப்புகள் குறித்து நம்மிடம் பேசிய சிவபக்தரான அசோக்,
“1,600 வருடங்கள் பழைமையான இந்தத் தலம், காசியை விட மகத்துவம் கொண்டது. மிருகண்ட மகரிஷி தவமிருந்த கோயில்களில் 11 சர்ப்பங்கள் இருந்து வழிபாடு நடத்துவதாகச் சொல்லப்படும் சாஸ்திரப்படி, இந்தக் கோயிலிலும் 11 நாகங்கள் இருக்கின்றன. அதேபோல், ‘காசி, அவிநாசி, மணவாசி’ என்று சொல்வார்கள். ‘காசிக்கு கால்பங்கு வீசம் மணவாசி’ என்றும் சொல்வார்கள். காசியில் உள்ள சிவனை வணங்கும்போது 100 சதவிகிதம் பலன் கிடைக்கும் என்றால், மணவாசி மத்தியபுரீஸ்வரை வணங்குவது 125 சதவிகித பலனைத் தரும். அதேபோல், மேற்கு நோக்கி அமைந்திருக்கும் சிவ தலங்களில் இதுவும் ஒன்று.
அதாவது, 108 கிழக்கு நோக்கி இருக்கும் சிவதலங்களில் வேண்டுவதற்கு சமமானது, இதுபோல் ஒரே ஒரு மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிவனை வணங்குவது கிராமத்து கோயில் என்பதால் பராமரிப்பு இல்லாமல், அதிகம் வழிபாடு நடத்தப்படாமல் இந்த கோயில் இருந்தது. அடியேன் உள்ளிட்ட சில சிவத்தொண்டர்கள் கடந்த ஐந்து வருடங்களாக, அரசு அனுமதியோடு பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் வழிபாடு நடத்தி வருகிறோம்.
அதனால், இருக்கும் கோயிலை அப்படியே புனரமைத்து குடமுழுக்கு நடத்த இருக்கிறோம். காலபைரவருக்கு மட்டும் புதிதாக தனி சந்நிதி அமைத்துள்ளோம். கோயிலுக்கு முன்பு இருக்கும் கல் ஸ்தூபியில் கையில் கமண்டலத்தோடு மிருகண்ட மகரிஷி வீற்றிருக்கிறார். அதேபோல், கோயில் வளாகத்தில் அதிகார நந்தி, சிவனுக்கு முன்பு சிறிய நந்தி, தனி சந்நிதியில் கோமளவள்ளி அம்பாள் என வீற்றிருக்கிறார்கள். கருவறை முன்புள்ள சுவர்களில் துவாரபாலகர்களும், வலதுபுறமாக கிழக்கு நோக்கி பிள்ளையாரும் இருக்கிறார்கள். அதேபோல், வெளி பிரகாரத்தில் கருவறைக்கு இடதுபுறம் தெட்சணாமூர்த்தி, வடக்குப்பக்கம் சண்டிகேஸ்வரர், கருவறைக்குப் பின்பகுதியில் காலபைரவர் என்று அமைந்திருக்கிறார்கள்.
வலதுபுறம் கிழக்கு பார்த்தவாறு வள்ளி, தெய்வானையோடு சுப்பிரமணிய சுவாமியாக முருகன் காட்சித்தருகிறார். இடதுபுறம் நாகர் கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பால் ஊற்றினால், திருநாகேஸ்வரத்தில் நடப்பதுபோல் நீலநிறமாக மாறும் அதிசயம் நடக்கிறது. கிராமத்து கோயில் என்பதால், போதிய நிதியில்லாமல் இதுவரை ஒருகால பூஜை மட்டுமே நடந்து வந்தது. வரும் 1 – ம் தேதி இந்த கோயிலில் குடமுழுக்கு செய்தபிறகு இந்து சமய அறநிலைத்துறை அனுமதியுடன் மத்தியபுரீஸ்வரருக்கு 4 கால பூஜை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிவன், அதிகார நந்தி, அம்பாளுக்கு அபிஷேகம், கிருத்திகை நாட்களில் முருகனுக்கு வழிபாடு, தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு பூஜை, பௌர்ணமிதோறும் அம்பாளுக்கு அபிஷேகம் என்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், வருடம் தவறாமல் சிவராத்திரியன்று விடிய விடிய நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது. இதைதவிர, ஆருத்ரா தரிசன பூஜையும், மார்கழி மாதங்களில் திருவாதிரை நாளன்று சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அந்த நாளில் தேங்காய் வைத்து வழிபட்டால், குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும்.
சிவன் மற்றும் அம்பாள் பாதங்களில் ஜாதகத்தை வைத்து வழிபட்டாலும், திருமண யோகம் கைகூடி வரும். அதேபோல், சிவனுக்கு சிவப்பு வஸ்திரம் வைத்து வழிபாடு நடத்தினால், கடன் பிரச்னைகள் தீரும். கோயில் வளாகத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கொண்டுதான் சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோயில் அமைந்திருக்கும் ஊர் பெயர் மணவாசி. அந்த எழுத்துகளை அப்படியே மாற்றிப் போட்டு படித்தால், ‘சிவாணம’ என்று வரும். அதாவது, ‘சிவாயநம’ என்ற சிவனுக்கான மந்திரச் சொல்லைக் குறிக்கும் அற்புதத்தை உணர முடியும்.
இந்த ஊரில் குடிக்கொண்டு அருளாட்சி புரியும் சிவன், அந்த ஊர் பெயரையும் மாட்சியமை தாங்கியதாக மாற்றிய அற்புதத்தை காண முடியும். மாலை நாலரை முதல் எட்டு மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த தலத்துக்கு வந்து சிவனையும், அம்பாளையும் மனமுருகி வேண்டினால் போதும். பக்தர்கள் வைக்கும் வேண்டுதல் யாவையும் நிறைவேற்றித் தருவார்கள். அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களை வெயில் பட்ட பனித்துளியென அகற்றுவார்கள். அதற்காக, காணிக்கை கூட செலுத்த வேண்டியதில்லை. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயில் பலவருடங்களாக குடமுழுக்கு செய்யப்படாமல் கிடந்தது.
காவிரியில் தென்கரையில் இருக்கும் இந்த ஆலயம் குடமுழுக்கு காணாமல் கிடப்பது, ஊருக்கு நல்லதில்லை என்று நினைத்தோம். கடைசியாக எப்போது குடமுழுக்கு நடந்தது என்று எந்த சான்றும் இல்லை. எங்க ஊரில் இருக்கும் 90 வயது பெரியர் ஒருவரைக் கேட்டபோது அவர்தான், ‘எனக்கு தெரிந்து இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறவில்லை. கடைசியாக குழமுழுக்கு நடந்து நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். இவ்வளவு வருடங்கள் குடமுழுக்கு நடத்தாமல் இருப்பது ஊருக்கு நல்லதில்லை’ என்று சொன்னார். அதோடு, ‘உடனடியாக கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னார்.
அதனால், அரசு அனுமதியோடு நிதி திரட்டி, கோயிலை அப்படியே பழமை மாறாமல் புனரமைத்தோம். போதிய நிதியில்லாததால், ராஜகோபுரம் எழுப்ப இயலவில்லை. குடமுழுக்கு விழாவை விமரிசையாக நடத்த இருக்கிறோம். அன்று யானைகள் கொண்டு தீர்த்தவாரி நடத்த இருக்கிறோம். 4 கால பூஜைகள் நடத்தி குடமுழுக்கு நடத்த இருக்கிறோம். தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த மத்தியபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்வது பக்தர்களுக்கு பல பேறுகளைத் தரும்.
அதோடு, நூறாண்டுகளைக் கடந்த இந்த தலம் குடமுழுக்கு காண இருப்பதால், அந்த காட்சியை பார்ப்பதே பலருக்கும் அரிதான நிகழ்வாக இருக்கும். தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள சிவபக்தர்களும், கரூர் மாவட்டத்தில் உள்ள மக்களும் நூறாண்டுகளுக்கு பிறகு நடக்கப் போகும் இந்த அற்புதத்தை நேரில் வந்து கண்டுக்களித்து அருளை பெற்றுச்செல்லவும். கரூரில் இருந்து திருச்சி மார்க்கத்தில் 20 – வது கிலோமீட்டரில் வருகிறது மணவாசி. மாறாக, திருச்சியில் இருந்து வந்தால், கரூர் சாலையில் உள்ள மாயனூரைத் தாண்டினால் வரும் மணவாசியை அடையலாம். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் மத்தியபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது” என்றார்.