லடாக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள் பலி – ராஜ்நாத் இரங்கல்

புதுடெல்லி: லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும்போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய வருத்தத்தை அளித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் டேங்கர் மூலம் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. துணிச்சலான வீரர்கள் நமது தேசத்துக்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.



காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “லடாக்கில் ராணுவத்தின் T-72 டேங்க், ஆற்றைக் கடக்கும்போது டேங்க்கில் இருந்த இளநிலை ஆணைய அதிகாரி (ஜெஎஸ்ஓ) உட்பட துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கமான இந்த நேரத்தில், நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு தேசம் ஒன்று சேர்ந்து வணக்கம் செலுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.