விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் அறிவிப்பு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்காக ஒரு அறையில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்தனர். அப்போது, உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், மருந்து கலவை தயாரித்த அறை மற்றும் அருகிலிருந்த இரு அறைகளும் இடிந்து தரைமட்டமாயின.

இந்த விபத்தில், அச்சங்குளத்தைச் சேர்ந்த போர்மேன் ராஜ்குமார் (45), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), சத்திரப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (35), செல்வகுமார் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி அச்சங்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60) காயமடைந்தார். தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.



இறந்தவர்கள் 4 பேரின் உடல்களும் கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், காயமடைந்த ராமச்சந்திரனும் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பட்டாசு ஆலை முன்பு குவிந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுந்தனர். அதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறுகையில்: பட்டாசு கலவை செய்யும் அறையில் நேற்று பணி முடிந்து வேதிப்பொருள்களை முறையாக அப்புறப்படுத்தாமல் இன்று காலை மருந்து கலவை செய்ததால் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆலை முறையாக அனுமதி பெற்று செயல்பட்டுவந்த ஆலை. விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளை கண்டறிய 5 சிறப்புக் குழுக்கள் அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உள் வாடகைக்கு விடப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் மூலப்பொருள்கள் பயன்படுத்தும் பட்டாசு ஆலைகள் கண்டறியப்பட்டு கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 80 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டியில், பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தெரியவரும். தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர் சகாதேவன், அவரது மகன் குருசாமி பாண்டியன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும், இந்த விபத்து குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, இறந்தவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.