வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “எம். வெங்கையா நாயுடு நாளை (ஜூலை 1) 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 75 ஆண்டுகள் அசாதாரணமானவை. வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த புத்தகங்கள் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக அமையும். தேசத்திற்கு சேவை செய்வதற்கான சரியான பாதையை இது காட்டும்.

வெங்கையா நாயுடுவுடன் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. பாஜக தேசியத் தலைவராக வெங்கையா நாயுடு இருந்த காலத்தில் இந்த நட்பு தொடங்கியது. மத்திய அமைச்சராக, நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக, மாநிலங்களவைத் தலைவராக அவர் பதவி வகித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார். மிகப் பெரிய அனுபவத்தை அவர் கொண்டிருக்கிறார். வெங்கையா நாயுடுவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.



வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் சிறந்த கலவை. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுக்கு வலுவான அடித்தளம் இல்லாமல் இருந்தது. வெங்கையா நாயுடு “தேசமே முதன்மையானது” என்ற சித்தாந்தத்துடன் ஏபிவிபி அமைப்பில் இணைந்து செயல்பட்டார். வெங்கையா நாயுடு அவசரநிலைக் காலத்தில் சுமார் 17 மாதங்கள் சிறையில் இருந்தார். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடியவர் அவர். அவசர நிலையின் போது சிறப்பாகச் செயல்பட்ட துணிச்சலான மனிதர் வெங்கையா நாயுடு.

அதிகாரம் என்பது வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவது அல்ல. அது, சேவையின் மூலம் திட்டங்களை நிறைவேற்றும் சாதனம். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றபோது வெங்கையா நாயுடு தன்னை நிரூபித்தார். அவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை செய்ய வெங்கையா நாயுடு விரும்பினார். எனது அமைச்சரவையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக வெங்கையா நாயுடு சிறப்பாக பணியாற்றினார். நவீன இந்திய நகரங்கள் குறித்த அவரது உறுதிப்பாட்டும், தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டுக்குரியவை.

மென்மையான குணம், சொற்பொழிவுத்திறன் மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்தவர் வெங்கையா நாயுடு. அவரின் நகைச்சுவை உணர்வு, அறிவுத்திறன், இயல்பான தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது வெங்கையா நாயுடு, ஒரு கையில் கட்சியின் கொடியையும் மறு கையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் திட்டத்தையும் கொண்டு செயல்பட்டார். வெங்கையா நாயுடுவின் வார்த்தைகளில் ஆழம், தீவிரம், தொலைநோக்கு, துடிப்பு, துள்ளல் மற்றும் விவேகம் இருக்கிறது. அவரது சிந்தனைகளால் நான் ஆச்சரியம் அடைந்துள்ளேன்.

வெங்கையா நாயுடு மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது நேர்மறையான சூழலை உருவாக்கினார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, மாநிலங்களவையில் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அவையின் கண்ணியத்தை பராமரித்து இதுபோன்ற உணர்வுப்பூர்வமான மசோதாக்களை நிறைவேற்றியதில் வெங்கையா நாயுடுவின் அனுபவம் மிக்க செயல் திறன் பாராட்டுக்குரியது. அவர் நீண்ட ஆயுளுடன், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்.

எளிமையான வாழ்க்கை முறையையும், மக்களுடன் தொடர்பில் இருப்பதில் சிறப்பான வழிகளையும் அவர் கையாண்டு வருகிறார். பண்டிகைகளின் போது வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் நான் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். இந்திய அரசியலுக்கு வெங்கையா நாயுடு போன்ற ஆளுமைகள் ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இன்று வெளியிடப்பட்ட மூன்று நூல்களும், வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிப்பவை. இவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளன” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.