Hardik Pandya : `அடுத்த நொடி வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!' – நெகிழ்ந்த ஹர்திக்

பிட்ச்சுக்கு நடுவே உலகக்கோப்பையை சுமந்தபடி கம்பீரமாக நிற்கிறார் ஹர்திக் பாண்ட்யா. உலகக்கோப்பை இந்தியாவின் கைகளில் தவழ மிக முக்கிய காரணங்களுள் அவரும்.

ஆனால், மற்றவர்களைவிட அவருக்கு இந்தப் பயணத்தில் வலி அதிகம், போராட்டம் அதிகம். ஒரு மாதம் முன்பு வரைக்கும் எதோ தேசத்துரோகம் செய்துவிட்டதை போல ரசிகர்கள் ரோஹித்தை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இன்றைக்கு உலகக்கோப்பையின் ஹீரோக்களில் அவரும் ஒருவர். இந்திய ரசிகர் கூட்டமே அவரை உச்சிமுகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.

Hardik

‘‘நம் தேசமே காத்திருந்த தருணம் இது. எனக்குமே ரொம்ப ஸ்பெஷல். கடந்த ஆறு மாதங்களாக எனக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. எனக்கு நடந்ததெல்லாம் அநீதிதான். நான் ஒரு வார்த்தைகூட அப்போது பேசவில்லை.நான் ஒளிரும் தருணம் ஒன்று வருமென்று காத்திருந்தேன். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு எனக்கு பேசக் கிடைத்திருக்கிறது!’’

தேசியக்கொடியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க ஹர்திக் பேசிய வார்த்தைகளில் அவ்வளவு வலி. அந்த வார்த்தைகளையும் வலியையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அதிருப்திக் குரல்களை எழுப்பினர். சமூக வலைதளங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர் தலைகாட்டும் இடங்களிலெல்லாம் அவரை இழிவுப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள். ரசிகர்கள் அவரை ஒரு சதவிகிதம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர் மீது எந்தத் தவறும் இல்லை. ரோஹித் சர்மாவை மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மும்பை நிர்வாகம். ஹர்திக்கிற்கு கேப்டனுக்கான வாய்ப்பைக் கொடுத்தது மும்பை நிர்வாகம்.

ஹர்திக் தனக்கு முன் இருக்கும் வாய்ப்புகளில் தனது கரியருக்கு பலனளிக்கும் நல்ல வாய்ப்பு எதுவோ அதைத் தேர்ந்தெடுத்தார். ஒரு நிறுவனத்திலிருந்து நம்முடைய முன்னெற்றத்துக்காக வேறு நிறுவனத்துக்கு மாறுவதைப் போன்ற செயல்தான் இது. அது ஒன்றும் உலக மகா குற்றம் இல்லை. நியாயப்படி பார்த்தால் ரசிகர்களின் கோபம் மும்பை அணியின் நிர்வாகம் பக்கம்தான் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஹர்திக் சிக்கிக் கொண்டார். ஐ.பி.எல் நடந்த இரண்டரை மாதங்களில் அவரால் எதையும் பேச முடியவில்லை. குஜராத் அணிக்காக இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்து சாம்பியனாகவும் ரன்னர் அப்பாகவும் வந்தவர், இங்கே மும்பை அணியில் தடுமாறினார். ஒரு அணியாகவே மும்பை கடுமையாகச் சொதப்பியது.

Hardik Pandya

விமர்சனத்துக்கு மேல் விமர்சனம், கேள்வி மேல் கேள்வி ஹர்திக்கின் மீது விழுந்துகொண்டே இருந்தது. நின்று நிதானித்து என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளக்கூட நேரமில்லை. அப்படி நாலாபுறமும் சூழந்து நின்று அடித்தார்கள்.

வாழ்க்கை அடுத்த நொடிக்குள் ஒழித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம் என்பதற்கு ஹர்திக்கின் கடந்த மூன்று மாதகாலம்தான் ஆகச்சிறந்த உதாரணம். ஒரு மாதம் முன்பு வரைக்கும் வசை மாரி பொழியப்பட்ட ஹர்திக்தான் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக கடைசி ஓவரை வீசுகிறார். இந்தியர்களின் உலகக்கோப்பை ஏக்கத்தை தீர்த்துக் கொள்வதற்கான கடைசி நம்பிக்கையாக ஹர்திக்தான் இருக்கிறார்.

கடைசி ஓவரில் 16 ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். கில்லர் மில்லர் களத்தில் நிற்கிறார். ஹர்திக் வீசியது ஒரு ஃபுல் டாஸ், அதை ஒரு பெரிய சிக்சராக மாற்ற முயற்சிக்கிறார் மில்லர். பவுண்டரி லைனில் அசாத்தியமான அந்த வாய்ப்பை அபாரமாக கேட்ச்சாக மாற்றுகிறார் சூர்யகுமார். அந்த நொடி ஹர்திக் கோடி இந்திய ரசிகர்களின் மனங்களில் ஹீரோவாக உயர்ந்துவிடுகிறார். என்ன ஒரு ஆச்சர்யம்! மே 29 வரைக்கும் ஹர்திக்கை வசைபாடிக் கொண்டிருந்த குரல்கள் இப்போது அப்படியே அவருக்கான ஆராவாரமாக மாறிவிட்டன. சூழ்ந்து நின்று அத்தனை பேரும் நெருக்கிக் கொண்டிருந்த போது ஹர்திக் எதாவது பேசியிருந்தால் இன்னும் நெருக்கியிருப்பார்கள். ஆனால், அவர் இப்போது பேசலாம். அவருக்கு ஒரு விடுதலை கிடைத்திருக்கிறது. மனதில் வைத்திருந்ததையெல்லாம் கொட்டிவிடலாம். அதன் வெளிப்பாடுதான் ஹர்திக்கின் கண்ணீரும் நெகிழ்ச்சி பேச்சும்.

Hardik

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு திடுதிடுப்பென கிடைத்துவிடாது. இந்தத் தொடர் முழுவதும் ஹர்திக் அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இக்கட்டான தருணங்களிலெல்லாம் அணிக்காக தன்னால் இயன்றதை செய்துகொடுத்திருக்கிறார். பேட்டிங்கில் பல போட்டிகளில் கேமியோ ஆடி அவர் எடுத்துக் கொடுத்த 20-30 ரன்கள் அணிக்குப் பெரிதாக உதவியது. பௌலிங்கிலும் பெரும்பாலும் தவறாமல் 2-3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார். மொத்தமாக 151 ரன்களையும் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். அதுவும் இறுதிப்போட்டியில் அவர் வீழ்த்திய க்ளாசெனின் விக்கெட் மேட்ச் வின்னிங் விக்கெட். அரைசதத்தைக் கடந்து அதிரடியாக வெளுத்துக் கொண்டிருந்தார்.

Hardik

பும்ரா ஒரு ஓவரை வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்து க்ளாசெனைக் கடுப்பேற்றினார். அடுத்த ஓவர் ஹர்திக்குக்குச் செல்கிறது. க்ளாசென் அட்டாக் செய்யும் மனநிலையில் இருப்பார் என்பதை உணர்ந்து ஸ்லோவாக ஒயிடாக ஒரு பந்தை வீசுகிறார். இதை எதிர்பார்க்காத க்ளாசென் காற்றில் பேட்டை வீசி எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். அதுதான் போட்டியை மாற்றிய தருணம்.

ரோஹித்துக்கும் ஹர்திக்கின் மீதும் அவரின் அனுபவம் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தது. அந்த விக்கெட் விழுந்தபோதே ஹர்திக்தான் கடைசி ஓவரை வீச வேண்டும் என்பதை ரோஹித் முடிவு செய்துவிட்டார். திட்டமிட்டபடியே மிகச்சிறப்பாக வீசினார். இந்திய மனங்களின் உச்சத்தைத் தொட்டு சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டார்.

“பின்தங்கிய சூழலிலிருந்து வந்த எனக்கு இதெல்லாம் ஒரு கனவு. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. நான் பண்பானவனாக இருக்க விரும்புகிறேன். என்னைப் பற்றி என்னவெல்லாமோ பேசினார்கள். ஒரு சதவிகிதம் கூட என்னைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் நான் இப்படித்தான் எனப் பேசினார்கள். பேசிக்கொள்ளட்டும், அதில் ஒன்றுமில்லை.

எப்போதுமே வார்த்தைகளின் வழி பதில் கொடுப்பதை விட செயல்களின் வழி பதில் கொடுப்பதே சிறந்தது என நினைக்கிறேன். கடினமான நாட்களை எதிர்கொள்ளும்போது இது நீண்ட காலத்துக்கு நிலைக்கப்போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.’ என நெஞ்சிலிருந்து பட்டாம்பூச்சிகள் பறக்கும் இதத்தோடு பேசியிருக்கிறார் ஹர்திக். வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு கடந்த சில மாதங்கள்தான் மாபெரும் சாட்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.