நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ-கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்த ஆட்சி தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மன் கி பாத்தில் உரையாற்றினார். முதன்முதலாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து பிரதமர் மோடியின் 111-வது உரையாகும். அந்த உரையில், “மன் கி பாத்-தின் ஆன்மா இன் னும் உயிப்புடன் இருக்கிறது. சில மாத இடைவெளியில் உங்களிடமிருந்து பல செய்திகள் வந்திருக்கின்றன. அதைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜூலை மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். ‘Cheer4Bharat’ என்ற ஹேஷ்டேக்குடன் அவர்களை ஊக்குவிக்குமாறு உங்களையும் கேட்டுகொள்கிறேன். குவைத் அரசு தனது தேசிய வானொலியில் இந்தி மொழியில் சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கியதற்கு நன்றி. 2024 மக்களவை தேர்தலில், ஜனநாயகத்தைக் காக்க பங்கேற்றதற்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காகவும் மக்களுக்கு நன்றி.
பழங்குடியின சமூகத்தால் அனுசரிக்கப்படும் ‘ஹல் திவாஸ்’ நிகழ்வுக்கு எனது வாழ்த்துகள். சுதந்திரப் போராட்டத்தில் சந்தாலி பழங்குடியினரின் துணிச்சலுக்கான குறிப்பிடத்தக்க நாள் இது. ஜார்க்கண்டில், சிடோ மற்றும் கன்ஹு முர்மு தலைமையிலான 1855 சந்தால் கிளர்ச்சியின் ஆண்டு நிறைவை ஜூன் 30 குறிக்கிறது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட ‘ஏக் பெட் மா கே நாம்’ பிரசாரத்தை தொடர்ந்து, என் அம்மாவின் நினைவாக ஒரு மரம் நட்டேன்.
மக்கள் தங்கள் மரம் நடும் படங்களை #Plant4Mother மற்றும் #Ek_Ped_Maa_Ke_Naam உடன் பகிர்ந்துகொண்டு மற்றவர்களை ஊக்கப்படுத்துவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. யோகா தின கொண்டாட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்ளூர் தயாரிப்பு உலகளாவிய ரீதியில் வனிகமாக்கப்படுவதை பார்க்கும்போது, பெருமைப்படுவது இயற்கையானது.
அப்படிப்பட்ட தயாரிப்புதான் ஆந்திராவின் அரக்கு காபியும், ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்னோ பீஸ் துணியும். கடந்த மாதம் புல்வாமாவிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட முதல் ஸ்னோ பீஸ் துணிகளுக்காக, இந்த முயற்சிக்கான முதல் அடியை எடுத்து வைத்த சகுரா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் மிருக்கும் பாராட்டுகள். ஆகாஷ் வாணி சம்ஸ்கிருதம் ஒளிபரப்பாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.
50 ஆண்டுகளாக, இது பலரை சம்ஸ்கிருதத்துடன் இணைக்க வைத்துள்ளது. சம்ஸ்கிருத மொழியை பிரபலப்படுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக, பெங்களூரின் கப்பன் பூங்காவில், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் சம்ஸ்கிருதத்தில் பல்வேறு தலைப்புகளில் உரையாடுவதற்காக சந்திக்கிறார்கள். இதற்கான முயற்சியை முன்னெடுத்த சமஷ்டி குப்பிக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்திருக்கிறார்.