டிராவிட் இவ்வளவு ரியாக்ட் செய்வாரா என்பதே பலருக்கும் நேற்றுதான் தெரிந்திருக்கும். வெற்றிக்கொண்டாட்டத்தின் ஆர்ப்பரிப்பில் ஆராவாரம் செய்தார். உலகக்கோப்பையை விராட் கோலி அழைத்து வழங்க அதைக் கையில் ஏந்திய தருணம்தான் டிராவிட்டின் கிரிக்கெட் கரியரின் அதி உன்னத தருணமாக இருந்திருக்கும்.
ஷாரூக்கானின் Chak De! India மொமன்ட் அப்படியே ரீ-கிரியேட் ஆனதைப் போல இருந்தது. ஒரு வீரராக ஒரு கேப்டனாக எங்கே வீழ்ந்தாரோ அங்கேயே ஒரு பயிற்சியாளராக நின்று வென்றிருக்கிறார். இந்தியாவின் ஆகச்சிறந்த வீரர்கள் என ஒரு டாப் 10 லிஸ்ட்டை தயார் செய்தால் அதில் டிராவிட்டின் பெயர் இல்லாமல் இருக்காது. டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். ஓடிஐ போட்டிகளில் ஏறக்குறைய 11,000 ரன்களை அடித்திருக்கிறார். அவர் முதல் முதலாக ஆடிய 1999 உலகக்கோப்பையில் தொடரிலேயே அதிக ரன்களை அடித்திருந்த வீரர் அவர்தான். டெஸ்ட்டில் இந்தியாவின் தடுப்புச்சுவர் என போற்றப்பட்டவர்.
2003 இல் அடிலெய்டில் லட்சுமணனுடன் இணைந்து 303 ரன்களுக்கு கூட்டணி அமைத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியை பெற்றுக்கொடுத்திருப்பார். இதே கூட்டணியின் கொல்கத்தா டெஸ்ட் சம்பவத்தைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படி எக்கச்சக்கமான சாகசங்களை தனது நிதானத்தின் வழி இந்தியாவுக்கு சாதித்துக் கொடுத்தவர் டிராவிட்.
ஆனால், அவரால் ஒரு பெரிய கோப்பையை வெல்ல முடியவில்லை. அது கூட பரவாயில்லை. கோப்பையை வெல்லாத ஜாம்பவான் வீரர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், டிராவிட் அவமானப்படுத்தப்பட்டார். இந்திய கிரிக்கெட்டின் இருண்ட பக்கங்களுக்கு சொந்தக்காரர் எனும் இழிவை அவர் முதுகில் சுமக்க நேர்ந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த 2007 உலகக்கோப்பை. இப்போது இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கிறதே இதே வெஸ்ட் இண்டீஸில்தான் அந்த உலகக்கோப்பையும் நடந்திருந்தது.
2003 உலகக்கோப்பையில் கங்குலி தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்ததால் இந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் மீது இமாலய எதிர்பார்ப்பு. ஆனால், அணிக்குள் சூழல் சரியாக இல்லை. அணியே பிளவுப்பட்டு கிடக்கிறது. ஜூனியர்கள் ஒரு பக்கமாகவும் சீனியர்கள் ஒரு பக்கமாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். இந்த நயவஞ்சகத்துக்கெல்லாம் காரணம் க்ரேக் சேப்பல். பயிற்சியாளர் என்ற பெயரில் இந்தியாவைப் பீடித்து அவதியுற செய்தார். அணிக்குள் தேவையில்லாத குழப்பங்களை உண்டாக்கினார். வீரர்களுக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை.
2007 உலகக்கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன்பு சச்சினின் வீடு தேடி சென்று டிராவிட்டை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிடலாம். நீங்கள் கேப்டன் ஆகிவிடுங்கள் என ஆலோசனை கூறுகிறார். சச்சின் மிரண்டுவிடுகிறார். இதெல்லாம் வேலைக்கே ஆகாது. இப்படியெல்லாம் நடந்தால் அணி சுக்குநூறாக உடைந்துவிடும் என சொல்லி கண்டித்து சேப்பலை அனுப்பி வைக்கிறார். இப்படி ஒரு சூழலில்தான் இந்தியா வெஸ்ட் இண்டீஸூக்கு ப்ளைட் பிடித்தது. யாரும் எதிர்பார்க்காததை விட மோசமான தோல்வி. கத்துக்குட்டிகளான வங்கதேசத்திடம் வீழ்ந்து முதல் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறியது. அவமானகரமான தோல்வி. ஆடவே தெரியாததைப் போல ஆடி இந்திய வீரர்கள் சொதப்பினார்கள்.
மக்கள் இந்திய கிரிக்கெட்டின் மீது கடும் கோபம் கொண்டனர். கிரிக்கெட்டை ஒரு கேலிப்பொருளாக மாற்றி மேடைதோறும் கிழித்துத் தொங்கவிட்டனர் ‘நாங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த போது எங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சூழ்ந்து செல்ல நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம். நாங்கள் தீவிரவாதிகள் போல உணர்ந்தோம். என்னுடைய வீட்டில் கல்லெறியப்பட்டிருந்தது.’
என அந்த 2007 நாட்கள் குறித்து வேதனையாகப் பகிர்ந்து கொள்வார் தோனி. அவருக்கே அந்த நிலையெனில் டிராவிட்டின் நிலையை யோசித்துப் பாருங்கள். பெவிலியனில் சோகமாக உட்கார்ந்து கண்ணீர் சிந்தும் புகைப்படத்தை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது. அந்த சமயத்தில் டிராவிட் உளவியல்ரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை கற்பனையே செய்ய முடியவில்லை. அவரின் கரியரே முடிந்துபோனது. டெஸ்ட் கிரிக்கெட்டராக மட்டுமே தொடர்ந்து ஆடினார். தன் மேல் படிந்த கறையை துடைத்துக் கொள்ள அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கவில்லை.
காலம் எல்லாவற்றையும் மாற்றும். ஒரு வீரராக டிராவிட்டுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காவிடிலும் ஒரு பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தது.
முதலில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளர் ஆனார். அந்த அணியை 2018 இல் உலகக்கோப்பையை வெல்ல வைத்தார். தொடர்ந்து 2021 டிசம்பரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக்கப்பட்டார். 2007 ஓடிஐ உலககோப்பையை போல 2021 இல் நடந்த டி20 உலகக்கோப்பையிலும் மோசமாக ஆடி இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியிருந்தது. கோலிக்கும் பிசிசிஐக்கும் முட்டிக்கொண்டது. கோலியிடம் தெரியப்படுத்தாமலேயே அவரை கேப்டன் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது பிசிசிஐ. ரோஹித் சர்மா புதிய கேப்டன் ஆனார். இந்திய கிரிக்கெட்டுக்கே கொஞ்சம் இக்கட்டான காலக்கட்டம்தான்.
இந்த சமயத்தில்தான் அணிக்குள் பயிற்சியாளராக நுழைகிறார் டிராவிட். முதலில் சில மாதங்களுக்கு கன்னாபின்னாவென பல வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து என்னனென்னவெல்லாமோ முயன்று பார்த்தார். ஆனால், உலகக்கோப்பை நெருங்குகையில் சரியாக ஒரு அணியை அடையாளம் கண்டு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 2023 உலகக்கோப்பையே இந்தியாவுடையதாக மாறியிருக்க வேண்டும். அந்த இறுதிப்போட்டி மட்டும் தவறிவிட்டது. அங்கே விட்டதற்கு சேர்த்து வைத்து வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணி சாதித்துவிட்டது.
‘ஒரு வீரராக என்னால் துரதிஷ்டவசமாக உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், ஒரு பயிற்சியாளராக என்னுடைய வீரர்கள் உலகக்கோப்பையை வென்று கொடுத்துவிட்டார்கள்.’ என பெருமிதம் பொங்கப் பேசியிருக்கிறார் டிராவிட்.
2007 இல் கண்ணீர் மல்க அமர்ந்திருந்த டிராவிட்டின் புகைப்படமும் இப்போது உலகக்கோப்பையோடு ஆர்ப்பரிக்கும் புகைப்படமும் ஒன்றாக மனதில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை. ஆம், காலம் எல்லாவற்றையும் மாற்றவல்லதுதான்!