நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடெங்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
கடைசியாகக் கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐசிசி தொடரை வென்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றுள்ளனர்.

பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் இந்த வெற்றியைக் கொண்டாடி, இந்திய அணி வீரர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சச்சின், இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், விராட் மற்றும் ரோஹித்திற்கு ஸ்பெஷலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் ரோஹித் பற்றி கூறியுள்ள சச்சின், “நம்பிக்கைக்குரிய இளைஞராக இருந்து உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக அனைவரது மனங்களையும் வென்ற உனது இந்தப் பயணத்தை நான் அருகில் இருந்து பார்த்தவன். உனது இந்த அர்ப்பணிப்பும், திறமையும் தேசத்திற்கு மகத்தான பெருமையைச் சேர்த்திருக்கிறது. டி20 உலகக் கோப்பையை வென்றது உனது இந்தக் கிரிக்கெட் பயணத்தின் உச்சம் ரோஹித்” என்ற பதிவிட்டுள்ளார்.
@ImRo45, I’ve witnessed your evolution from a promising youngster to a World Cup-winning captain from close quarters. Your unwavering commitment & exceptional talent have brought immense pride to the nation. Leading to a T20 World Cup victory… pic.twitter.com/QSEui6Bq2K
— Sachin Tendulkar (@sachin_rt) June 30, 2024
விராட் பற்றி, “விராட் நீதான் உண்மையான சாம்பியன். இத்தொடரின் ஆரம்பத்தில் உனது ஆட்டம் கொஞ்சம் கடினமாக அமைந்திருக்கலாம். ஆனால், நேற்று இரவு உண்மையான சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்று இப்போது வெற்றி பெற்றது எனக்கு நன்றாகத் தெரிந்த அனுபவம். இந்தியாவிற்காக இன்னும் விளையாடி பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.