அமெரிக்கா: கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி; விசாரணையில் திடுக் தகவல்

நியூயார்க்,

அமெரிக்காவின் மிசவுரி பகுதியை சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (வயது 47). இவர் தன்னுடைய கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான பின்னணி அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இவருடைய கணவரின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பீட்டர்ஸ், பிறந்த நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கணவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதனை பாராட்டி அவர் எதுவும் கூறவில்லை.

இதனால், ஆத்திரத்தில் இருந்த மனைவி பீட்டர்ஸ், கணவருக்கு சோடாவில் களைக்கொல்லியை கலந்து கொடுத்து விட்டார். அதனை அவருடைய கணவர் வாங்கி குடித்தபோது, முதலில் சுவை வேறுபட்டு இருந்துள்ளது. எனினும், அதனை புறந்தள்ளி விட்டு சோடாவை குடித்து முடித்திருக்கிறார்.

சில வாரங்கள் கழித்தே அதன் விளைவுகள் தெரிய வந்தன. அவருக்கு வறண்ட தொண்டை, பேதி மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. மனைவி விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் என அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சி.சி.டி.வி. காட்சியை சந்தேகத்தின்பேரில் பார்த்தபோது, பிரிட்ஜில் இருந்து மனைவி சோடாவை எடுப்பதோடு, வீட்டில் இருந்த களைக்கொல்லி பாட்டிலையும் எடுத்து சென்ற காட்சியை கண்டார். பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு பொருட்களையும் எடுத்த இடத்தில் பீட்டர்ஸ் வைத்து விட்டார்.

அவர் மனைவியிடம் சென்று, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூற முயன்றிருக்கிறார். ஆனால் அதற்குள் மனைவியோ, உங்களுக்கு கொரோனா வந்திருக்க கூடும். அதனால், குழந்தைகளிடம் இருந்து தள்ளி இருங்கள் என கூறியிருக்கிறார்.

இதனை கேட்டு கணவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இதன்பின் ஒரு முடிவுக்கு வந்து, போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். அவர்கள் வந்து பீட்டர்ஸை கைது செய்து சென்றனர். விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

அவருக்கு சட்டவிரோத தொடர்பு ஏதும் உண்டா? அல்லது கணவரான தன்னுடைய ரூ.4 கோடி காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இதனை அவர் செய்திருக்கிறாரா? என தனக்கு தெரியவில்லை என கணவர் கூறுகிறார். சமீபத்தில், வங்கியில் அவர்களுக்கான தனி கணக்கில் பீட்டர்ஸ் செலுத்தும் பணமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனையும் அவருடைய கணவர் கவனித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.