“இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அண்ணாமலை

சென்னை: “இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்துடன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எப்போதும்போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மையான நிலை என்னவென்பதை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோல் என்றால், இன்று சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வழிகளை இண்டியா கூட்டணி கையாண்டுள்ளது.

இன்று மக்களவையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வ்ளவு பெரிய தோல்வியும் இண்டியா கூட்டணியின் ஈகோவை அடக்கிவிடாதுபோல” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



முன்னதாக மக்களவையில் இன்று பேசிய ராகுல் காந்தி, “ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது.” என்று தெரிவித்தார்.

பாஜகவினர் இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் பேசும்போதே இடைமறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.