இலங்கையில் ஓவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 4 பேர் வபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்றும், நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் நாளொன்றிற்கு 32-35 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிரிதுங்க தெரிவித்தார்.
இன்று ஆரம்பமாகின்ற 09 ஆவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற விழிப்புணர்வு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
ஓவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ஆரம்பத்தின் முதலாவது திங்கட்கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதற்கமைய இந்த வருடத்திற்கான 9வது தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிமை வரை இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் அரச வைத்தியசாலைகளுக்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்களில் பெரும்பாலானோர் விபத்துகளுக்கு உள்ளாகி வருபவர்கள் என்று கூறிய விசேட வைத்திய நிபுணர், வருடத்திற்கு ஏறக்குறைய ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு சிகிச்சை பெற வருவதாகவும், மேலும் பலர் வெளி நோயாளர் பிரிவுகளிலும், தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பெரும்பாலும் 15-44 வயதுக்குட்பட்டவர்கள் நோய்வாய்ப்படுதல் அல்லது மரணிப்பதற்கான பிரதான காரணம் விபத்துக்களே என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். இந்த விபத்துக்கள் காரணமாக அரசாங்க வைத்தியசாலைகள் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல பில்லியன்களை செலவிடுகின்றன..
மேலும் அதிகளவிலான வாகன விபத்துக்கள் ஏற்பட்டாலும், விழுதல், நீரில் மூழ்குதல், தீக்காயங்கள், விலங்குகள் கடித்தல், பாம்புக்கடி போன்ற விபத்துக்களும் பதிவாகின்றன. விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அல்லது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களில் 50% க்கும் அதிகமானோர் வீடுகளில் விபத்துக்களில் உள்ளானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர, 25% வீதி விபத்துகள் பதிவாகி வருவதாகவும், 10% விபத்துகள் பணியிடங்களில் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட மருத்துவர், விபத்து தடுப்பு வாரத்தின் 05 நாட்களில், ஒவ்வொரு அம்சம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் .
அத்துடன், விபத்துக்களை குறைக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த வருடத்தின் 09வது தேசிய விபத்து தடுப்பு வாரத்தின் நோக்கமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் சமித சிரிதுங்க வலியுறுத்தினார்.