டெல் அவில்: பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகல் பாராது சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 80,060 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் பல மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலின் சிறைகளில் பகல், இரவு பாராது சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார். இவர் எட்டு மாத காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா இஸ்ரேலிய சிறையில் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பல கைதிகள் விசாரணை அறைகளில் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய மருத்துவர்களும், செவிலியர்களும் பாலஸ்தீன கைதிகளை அடித்து சித்ரவதை செய்கின்றனர் மற்றும் கைதிகளின் உடல்களை உயிரற்ற பொருட்களைப் போல நடத்துகிறார்கள்.
உணவு மறுக்கப்பட்ட காரணத்தால், ஒவ்வொரு கைதியும் சுமார் 30 கிலோ எடையை இழந்தனர், நாங்கள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளானோம். இரண்டு மாதங்களாகவே, கைதிகள் யாரும் ஒரு நாளைக்கு ஒரு ரொட்டிக்கு மேல் சாப்பிடவில்லை” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.