அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அகமதாபாத், காந்திநகர், சூரத் மற்றும் பல பகுதிகளில் கனமழை பதிவாகி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இது சார்ந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் மாநிலத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா, குஜராத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-ம் தேதி அன்று காலை 6 முதல் மாலை 4 மணி வரையில் அகமதாபாத் நகரில் மட்டுமே சுமார் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், மாநிலத்தின் 43 இடங்களில் 10 மணி நேரத்தில் சுமார் 40 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதில் சூரத் மாவட்டத்தில் உள்ள பர்தோலி, சூரத் நகரம், கம்ரேஜ் மற்றும் மஹுவா தாலுகாவில் முறையே 135, 123, 120 மற்றும் 119 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் மழை பொழிவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் குஜராத்தில் உள்ள வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களிலும், வடக்கு குஜராத்திலும் கனமழை பொழியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரி அளவை விட குறைவு: இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் ஜூன் மாதம் பதிவான மழை சராசரி அளவை விட குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை ஓய்ந்து தற்போது பரவலாக மழை பொழிந்து வந்தாலும்கூட இந்த மாதத்தின் மத்தியில் மழையின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மத்திய, வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் முறையே 14 சதவீதம், 33 சதவீதம் மற்றும் 13 சதவீதம் என சராசரி மழைப்பொழிவைக் காட்டிலும் குறைவாகப் பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் தெற்கு பகுதிகளில் சராசரி மழைப்பொழிவை காட்டிலும் அதிக மழை பொழிந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம், மேகாலயா, அருணாச்சல், பிஹார், மேற்கு வங்கம், சிக்கிம், ராஜஸ்தான் கிழக்கு, ஹரியாணா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், ஒடிசா, மத்திய பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மகாராஷ்டிரா, கோவா, தமிழகம், கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 3-ம் தேதி வரையில் இமாச்சல், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் கனமழை பொழியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் கேரளா, தெற்கு கர்நாடகா, கோவா, தமிழகத்தில் மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.