சென்னை, தி.நகர் ஹிந்திபிரசார சபா தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபத்தில் வெள்ளி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைவரை ஶ்ரீ பத்ராசல ராமர் தரிசன விழா நடைபெற்றது
இந்த நிகழ்வை பக்த பாரத சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பஜனைகள், உபன்யாசம், விசேஷ பூஜைகள் என நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா அரங்கில் பிரமாண்டமான பகவான் ஸ்ரீ பத்ராசல ராமர் சீதை மற்றும் லட்சுமணன் திருமேனிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் 20 அடி உயர விஸ்வரூப அனுமன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. விஸ்வரூப அனுமன் சிலையை பக்தர்கள் சிலிர்ப்போடு வழிபட்டுச் சென்றனர்.
(28.6.24) காலை சுப்ரபாதத்துடன் விழா தொடங்கியது. ‘ஶ்ரீராமப் பிரபாவம்’ என்னும் தலைப்பில் அனந்த பத்மநாப சுவாமிகள் உரையாற்றினார். தொடர்ந்து பஜனைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. மாலை 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் தி.நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். (29.6.24) காலை 7.30 மணிக்கு அக்காரக்கனி ஶ்ரீநிதி, பத்ராசல ராமதாசர் குறித்த உபன்யாசம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து, காலை 10. 30 மணி முதல் 12 வரை ஶ்ரீசீதா தேவிக்கு 1008 புடவை அர்ச்சனை செய்யப்பட்டது. மாலை 5 – 7 மணிக்கு பாரதி திருமகனின் வில்லிசையும் நித்யஶ்ரீ மகாதேவனின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.
30.6.24 அன்று காலை 7.30 மணிக்கு ஶ்ரீராமநாம மகிமை குறித்து டாக்டர் உ.வே. வெங்கடேஷ் உபன்யாசம் செய்திருக்கிறார். தொடர்ந்து இஸ்கான் சென்னை பக்தர்கள் இணைந்து நாம சங்கீர்த்தனம் நடத்தியிருக்கிறார்கள். அன்று மாலையில் வி. கார்த்திக் ஞானேஸ்வர் குழுவினரின் பஜனையும் ஶ்ரீசத்யநாராயணன் குழுவினரின் கீ. போர்ட் இசைக்கச்சேரியும் நடைபெற்றன.