- அனைவரையும் ஒன்றிணைத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பாடத்தை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் – பின்னர் அரசியல் செய்யுங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு.
- கடந்த இரண்டு வருடங்களில் நாட்டை நேசிப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியாக நாட்டிற்காக பரந்துபட்ட பணிகளை நிறைவேற்றினேன்.
- புதிய அரசியல் பயணம் மாத்தறையில் ஆரம்பமானது.
- இந்தப் புதிய அரசியல் பயணத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூணுவோம்.
இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று (30) மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“ஒன்றாக வெல்வோம் – நாம் மாத்தறை ” என்ற தொனிப்பொருளில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக் கூட்டத்தில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை முன்னிறுத்தி கட்சி அரசியலை விட்டு விலகி இந்த வேலைத் திட்டத்தில் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற பாடத்தை அந்த சமயம் தன்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
மூழ்கவிருந்த கப்பலை என்னிடம் ஒப்படைத்ததாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கூறினார். ஆனால், என்னிடம் டைட்டானிக் கப்பல் ஒன்றே ஒப்படைக்கப்பட்டது. அதனை நான் தற்போது துறைமுகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன். இருந்த மாலுமிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.பனிப் பாறைக்குப் பயந்து அதனைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை. கப்பல் மூழ்கி நாம் பலியாவதா? அல்லது கரையொதுங்குவதா என்ற கேள்வியே இருந்தது. நாம் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளோம். இந்தக் கப்பலுடன் நாம் என்ன செய்யப் போகிறோம். இந்தக் கப்பலைத் திருத்திக் கொண்டு இன்னும் 50 – 100 வருடங்களுக்குப் பாதுகாப்பாக பயணிக்கப் போகிறோமா? அல்லது தப்பியோடி மாலுமி ஒருவரிடம் கப்பலை ஒப்படைப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நான் இந்த இடத்திற்கு வரும்போது மாத்தறை மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த துயரங்கள் நினைவுக்கு வந்தது. 2022ஆம் ஆண்டு தமிழ், சிங்களப் புத்தாண்டில் நான் மாத்தறை, கம்புறுகமுவ பிரதேசத்தில் இருந்தேன். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இருந்தது. அங்கு மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் இருந்தன. மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். தமிழ், சிங்கள புத்தாண்டு சுப வேளையிலும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். என் வாழ்நாளில் இவ்வாறான சம்பவங்களை இதற்குமுன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆண், பெண் பாகுபாடின்றி மக்கள் வரிசையில் இருந்தனர். ஒருநாள் அவர்கள் முட்டி மோதிக் கொண்டனர். அவ்வாறான ஒரு நிலை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட இடமளிக்க முடியாது என்று நான் தீர்மானித்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் பேசியிருந்தேன், உலக வங்கியின் அதிகாரிகளின் பதிலை அப்போதைய ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தேன். அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கேட்டிருந்தேன். எவ்வாறாயினும், இறுதியில் எனக்கு இதனைப் பொறுப்பேற்க நேரிட்டது. உலக வரலாற்றில் புதிய முறையில் நான் இதனை பொறுப்பேற்றேன். அனைவரும் தப்பியோடிய பின்னர், எனக்குப் பொறுப்பேற்குமாறு கூறினார்கள்.
அரசியலமைப்பின் படி பிரதமர் பதவி விலகினால், ஆளும் கட்சிக்கு அதிகாரத்தைப் பொறுப்பேற்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி அதனைப் பொறுப்பேற்க வேண்டும். விசேடமாக ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தது. ஆனால் அனைவரும் தப்பியோடினர். பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை அதனால் பதவியை பொறுப்பேற்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர். அவ்வாறான நிலையே அன்று இருந்தது. எங்களின் பொருளாதார முறைமை மட்டும் அன்று உடைந்துவிழவில்லை. எமது அரசியல் முறைமையும் உடைந்துவிட்டது. எவ்வாறாயினும், நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். இது வெற்றியடையாது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததுடன், என் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது.
ஐ.எம்.எப் உடன் பேச்சு நடத்தினேன். இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. முதல் பணியாக விவசாயத்தில் கவனம் செலுத்தினோம். 2023ஆம் ஆண்டு சிறுபோகத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்குமாறு கேட்டுக் கொண்டோம். எமது விவசாயிகள் அதனைச் செய்தார்கள். எமது உற்பத்தியில் பெரும் பகுதியில் விவசாயமே பங்காற்றியது. 2023ஆம் ஆண்டு பெரும்போகமும் வெற்றியளித்தது. 2023 – 2024 சிறுபோகமும் வெற்றியளித்தது. 2024ஆம் ஆண்டு பெரும்போகமும் வெற்றியளித்தது. இதனால், சித்திரைப் புத்தாண்டு, வெசாக், பொசொன், தன்சல் ஆகியவற்றை இவ்வாறு கொண்டாடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தெற்கு மக்களும் உதவினார்கள். இரண்டாவதாக, சுற்றுலாத் துறை வளர்ச்சியை ஏற்படுத்தினோம். இஸ்ரேல், உக்ரெய்ன், ரஸ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இங்கு வருவதற்கு ஊக்கமளித்தோம். இதன்மூலம் எமக்குத் தேவையான அந்நியச் செலாவணி கிடைத்தது. வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இன்னுமொரு பகுதி கிடைத்தது. இவற்றின் மூலமே நாம் இதனை முன்னேற்றினோம். பிரச்சினைகள் இருந்தன.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாக ஐ.எம்.எப். உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு வாக்குறுதியளித்துள்ளோம். அதாவது எமக்கு பணத்தை அச்சிட முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியாது. எனவே, எமக்கு வேறு வருமானம் தேவைப்பட்டது. வற் வரியை அதிகரித்தோம். இது மிகக் கடினமான தீர்மானமாக இருந்தாலும் நாம் அந்தத் தீர்மானத்தை எடுத்தோம். இன்று நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தையும் நாம் முன்னேற்ற வேண்டியுள்ளது. ஆனால் வற் வரியை இனியும் அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் செல்வந்தர்களிடம் விசேட வரியொன்றை அறவிட நேரிடும். இது சாதாரண மக்களைப் பாதிக்காது. எனவே, கடினமான தீர்மானங்களை எடுத்தோம். அதன்பின்னர் நாம் அஸ்வெசும திட்டத்தை அறிமுகப்படுத்தி சமூர்த்தியைப் போன்று மும்மடங்கு நிவாரணத்தை வழங்கினோம். 16 இலட்ச பேருக்குப் பதிலாக 24 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கினோம். வங்குரோத்து இல்லாமல் நல்ல நிலையில் இருந்தபோது செய்ய முடியாத பல விடங்களை நாடு வங்குரோத்து அடைந்துள்ள இந்த நேரத்தில் செய்கின்றோம். சித்திரைப் புத்தாண்டு காலத்தில் குறைந்தவருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசியை வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கினோம். அரசாங்க காணிகள் உள்ள அனைவருக்கும் நாம் காணி உறுதிகளை வழங்குகிறோம். அடுத்த வாரம் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 2 இலட்சம் பேருக்கு குடியிருக்கும் வீடுகளின் உரிமத்தை வழங்கவுள்ளோம். 24 இலட்சம் குடும்பங்கள் தற்போது அஸ்வெசும நிவாரணம் பெறுகின்றனர். 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகள் கிடைக்கவுள்ளன. குறைந்தவருமானம் பெறும் இரண்டரைஈலட்சம் பேருக்கு அடிக்குமாடி குடியிருப்பிற்கான உரிமம் கிடைக்கவுள்ளது.
நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாம் இந்த நெருக்கடியான காலத்தில் பலன்களை உங்களுக்குத் தந்துள்ளோம். தற்போது நாம் எதிர்காலப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டியுள்ளது. ஒரே மூச்சில் அந்த நிலையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில் எமக்கு கடனை மீளச் செலுத்த நேரிடும். ஆனால் கடன் செலுத்தும் சக்தி எம்மிடம் இன்னும் இல்லை. அத்துடன், முழுக் கடனையும் உடனடியாக செலுத்த வேண்டிய தேவை இல்லை. எமது முழுமையான கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 108 வீதமாக உள்ளது. எனவே, எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எமக்கு கால அவகாசம் தேவையெனக் கேட்டோம். ஒருபுறம், மேற்கத்தேய நாடுகள் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். மறுபுறம், சீனாவுடன் பேசினோம். தற்போது இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எமக்கு கடனை செலுத்தாமல் இருக்க 5 வருட கால அவகாசம் இருக்கிறது. அதன்பின்னர் 2042ஆம் ஆண்டுவரை கடன் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் செலுத்த வேண்டிய தொகையும் குறையும். ஐ.எம்.எப். வேலைத் திட்டத்தை முன்னெடுத்தால் இந்த சலுகைகளைப் பெற முடியும் என்று எமக்கு அறிவிக்கப்பட்டது. ஐ.எம்.எப். வேலைத் திட்டத்துடன் இணங்கி, அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது என்ற இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். இந்த இரண்டு இணக்கப்பாடுகளையும் நாம் எட்டியுள்ளோம். இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன். இதனைத்தவிர, எமக்கு கடன் வழங்கிய நாடுகளைத் தவிர பிணை முறிகள் மற்றும் தனியாரிடமிருந்தும் நாம் உத்தியோகபூர்வமாக கடன் பெற்றுள்ளோம். இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், பிணை முறிகளுக்கு கடன் வழங்கிய தரப்பினர் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது அதையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தைகளையும் அடுத்த வாரம் வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மூன்று உடன்படிக்கைகளையும் சேர்த்துக் கொள்வோம் என்று அரச நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்தேன். இது குறித்து விரிவாக நான் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளேன். இவற்றை அரச நிதி தொடர்பான குழு ஆராய்ந்த பின்னர் வாக்கெடுப்பிற்கு செல்வோம் என்று நான் கூறியுள்ளேன். பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதை உலகம் அறிய விரும்புகிறது. எனவே, நான் இவற்றை சமர்ப்பிக்கிறேன். இதனைவிட சிறந்த தீர்வோ, மாற்றுவழியோ இருக்கிறது என்று எந்தவொரு கட்சியாவது கூறினால், அவர்களுக்கு வொஷிங்டன் சென்று ஐ.எம்.எப். உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவர்களுக்கான பயணச் சீட்டையும், தங்குமிட வசதிகளையும் அரசாங்கம் ஏற்பதற்கு தயாராக இருக்கிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்வைக் கொண்டுவந்தால் அதுகுறித்தும் நாம் பாராளுமன்றத்தில் கலந்தாலோசிக்க முடியும். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், பழைய முறையில் அரசியல் செய்ய முடியாது. நாம் எடுக்கும் தீர்மானம் எங்கள் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து நாம் விலகிச் சென்றால், நாம் எவ்வாறு தனித்துப் பயணிக்கப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. இந்த உடன்படிக்கைகள் இல்லாமல் நாட்டை முன்நோக்கி நகர்த்த முடியுமா? இந்த உடன்படிக்கைகள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இருக்கிறதா? அல்லது வரிசை யுகத்திற்கு மீண்டும் செல்வதா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும். இந்த சம்பிரதாய அரசியலில் இருந்து விடுபட வேண்டும். தீர்க்கமான தீர்மானமொன்றை நாம் எடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாம் எவ்வாறு பணம் செலுத்தப் போகிறோம்? எரிபொருளுக்கு பணம் செலுத்தப் போகிறோம்? எங்களுக்கு அந்நியச் செலாவணி இல்லையென்றால், நாம் கடன் பெறப் போகிறோமா? அப்படி செய்தால் இன்னும் 15 வருடங்களில் எழுந்துவர முடியாத, பழிகுழியில் மீண்டும் விழுவோம் என்பதை நான் உறுதியாக கூறிவைக்க விரும்புகிறேன். இதனை நான் எழுதித் தருகிறேன். இதனை செய்யப் போகிறோமா அல்லது நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கப் போகிறோமா? நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். உங்களது எதிர்காலத்தை மையப்படுத்தியே இந்தத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அடுத்த 5 – 10 வருடங்களில் உங்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிற வேண்டும் என்பதை மையப்படுத்தி தீர்மானங்கள் எடுக்க வேண்டும். இளைஞர்களுக்காக இந்தத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும். மீண்டும் நெருக்கடிக்குள் செல்வதா அல்லது அபிவிருத்தியடைந்த நாடாக முன்நோக்கிச் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களின் எதிர்காலமே இதில் தங்கியுள்ளது. இந்தத் தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டும். இதற்காகவே நாட்டிற்காக பணியாற்றுவோம் என்று அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் கூறுகிறேன்.
நான் அடங்களாக இந்த அமைச்சரவை எந்தக் கட்சிக்குச் சொந்தமானது எனக் கேட்கின்றனர். நாட்டிற்காக ஒன்றுபட்டவர்களே இதில் இருக்கின்றனர். இதில் மொட்டுக் கட்சியினர் இருக்கின்றனர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இருக்கின்றனர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர், ஐக்கிய தேசியக் கட்சியினர் இருக்கின்றனர். நாம் நாட்டிற்காக ஒன்றிணைந்துள்ளோம். எமக்கென்று ஒரு கட்சி இல்லை. வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். புதிய அரசியல் முறைமையொன்றை நாம் ஆரம்பித்துள்ளோம். நாட்டிற்கு முதலிடம். அதன்பின்னரே கட்சி. மொட்டுக் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்கட்சியிலும் இருக்கின்றனர். ஆனால் நாட்டிற்காக சிந்தித்து பணியாற்றும் பலரே தற்போது அரசாங்கத்தில் இருக்கின்றனர். நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தப் பணத்தில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் இந்தப் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். எதிர்க்காலத்தில் தலைமைத்துவத்தை எவ்வாறு பெறுவது? எவ்வாறு இந்தப் பணிகளை முன்னெடுப்பது என்று என்னிடம் கற்றுக்கொள்ளவும் முடியும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசியல் முறையை மாற்றுவோம். தினமும் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதில் பலனில்லை. நான் அவ்வாறு செய்யவில்லை. நாம் புதிய பாதையில் பயணிக்கிறோம். இதற்காக அர்ப்பணிக்க வேண்டும். நான் அதற்காக அர்ப்பணித்துள்ளேன்.
அடுத்த தேர்தலில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அனைவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பதைத் தீர்மானிக்கலாம். அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பதைத் தீர்மானிக்கலாம். அந்தத் தீர்மானங்களுக்கு இணங்க செயற்பட நானும் தயார். எங்களுக்கு இன்று தனிநபர், கட்சி சார்ப்பு அரசியல் இல்லை. நாம் நாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டை முன்னிலைப்படுத்து முன்நோக்கிப் பயணிப்போம் என்று கூறவிரும்புகிறேன். இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தல்கள் வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெற இருகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த பணம் இல்லை.. அதனால் அதனை இறுதியாக நடத்துமாறு கோரினார்கள். அதுகுறித்து கூச்சலிடத் தேவையில்லை. ஊர்வலம் வர முன்னர் மேளதாளங்கள் அவசியமில்லை. இதுகுறித்தும் நாம் தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும், நாம் எதிர்காலம் குறித்து சிந்தித்து பணியாற்றுவோம். அண்மைக்காலமாக நீங்கள் பட்ட துன்பம் குறித்து கவலையடைகிறேன். இந்த அரசாங்கம் அது தொடர்பில் கவலைகொள்கிறது. அடுத்ததாக நாம் எடுத்த தீர்மானங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றிணையுமாறு நாம் அனைவரையும் அழைக்கிறேன். எதிர்காலத்தில் புதிய பாதையில் பயணிக்க வருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
“இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். இதனையடுத்து, நாங்களும் அமைச்சரவையில் இருந்து விலகினோம். பொருளாதார நெருக்கடிக்கு எதிர்கொள்ளும் எந்தவொரு தலைவருக்கும் பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று தெரிவித்திருந்தோம். இன்று நாட்டைப் பொறுப்பேற்கத் துடிக்கும் பல தலைவர்கள் அன்று தப்பியோடினர்.
ஆனால் அந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அப்போது ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்குள் நாட்டுக்காக பாரிய பங்காற்றினார். அதனை நீங்கள் அனைவரும் அனுபவித்திருப்பீர்கள்.
இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, சரியான பொருளாதார திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தினார். பொருளாதாரப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின், அனுபவமுடைய, சவால்களை ஏற்கக்கூடிய தலைவர் ஒருவர் தேவை. அந்தத் தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. ஜனாதிபதி தேர்தலுக்கு வரப்போவதாக அவர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், இந்த தொடர் பொதுக்கூட்டம் மூலம் மக்கள் அவருக்கு கோரிக்கை வைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,
”ஒரு அரசாங்கம், மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அரசாங்கம் நிலைக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் எரிபொருள், மருந்து, எரிவாயு, பால் மா இருக்கவில்லை. அவற்றை கொள்வளவு செய்ய டொலர்கள் இல்லை. அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, பொருளாதாரத்தை அரசாங்கம் சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
75 வருட வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளன. கடந்த அரசாங்கத்திற்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன. அவர் பதவியில் இருந்து விலகியதும், இன்று பல்வேறு கதைகள் பேசுபவர்களை பொறுப்பேற்க அழைத்தார். ஆனால் அந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்க மட்டும் நிபந்தனையின்றி நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் தலைவர் ஒருவர் நமக்கும் தேவை. இந்தப் பொருளாதாரத் திட்டத்தை தொடராது போனால், ஒரு வருடம் செல்வதற்கு முன்னர் மீண்டும் நாட்டில் நெருக்கடி ஏற்படும். எனவே, மீண்டும் வீழ்ச்சியடையாமல் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். அதற்கான அனுபவமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமேயாகும்” என்று தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
”ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் இணைந்து பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். 2019 இல், சடத்தரணியாக பணியாற்றியவாறு நாட்டை முன்னேற்றவும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காகவும் செயற்பட்டேன். ஆனால் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளின் யுகம் தொடங்கியது. அப்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து, நாட்டை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது, திறைசேரி பதிவேடுகளைப் பார்த்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியில் இருக்கும் பொருளாதார நிபுணர்களும், அடுத்த 06 மாதங்களில் பொருளாதாரம் வெடித்துச் சிதறும் என்று தெரிவித்தனர். நாட்டைப் பொறுப்பேற்க பின்வாங்கினர்.
ஆனால், பொருளாதாரப் பிரச்சினையைக் கண்டு, ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தார். தேசிய பாதுகாப்பு என்பது எல்லைகள் பிரியாமல் பாதுகாப்பது மாத்திரம் அல்ல. ஒரு நாடு என்ற வகையில், இலங்கையின் பொருளாதாரத்தை மற்ற நாடுகளைச் சார்ந்திருக்காத நிலைக்குக் கட்டியெழுப்புவது தேசிய பாதுகாப்பின் முதன்மையான பணியாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதனைச் சரியாகச் செய்ய முடிந்தது.
அவருடைய திறமைக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அண்மையில் நான் பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தேன். 200 அமெரிக்க டொலர் கடனை இலங்கை திருப்பி செலுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டு, ஈரானின் கடன் தவணைகள் கூட திருப்பிச் செலுத்த ஆரம்பித்துள்ளோம். இவை அனைத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார நோக்கின் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்பதை இந்த நேரத்தில் நான் கூறிக்கொள்கிறேன்” என்றார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,
”கடந்த காலங்களில் ரூபாவின் பெறுமதி சரிந்தது. இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. நாடு முழுவதும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருந்தன. நாடு முழுவதுமாக ஸ்தம்பித்து விட்டது. இக்கட்டான சூழலில் ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார். நாட்டின் எதிர்காலத்திற்காக சில கடினமான ஆனால் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நாட்டில் வரி முறை சீர்திருத்தப்பட்டது. நாடு விழுந்த இடத்திலிருந்து முன்னேறும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டு மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், அரசாங்கம் மாறினாலும் மாறாத கொள்கை இந்த நாட்டுக்குத் தேவை. அதற்கு நேரடித் தலைமையொன்று தேவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முதலில் இந்நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்வதற்காக செயற்படுகின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இது போன்று ஒன்றிணைவதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,
”கடலில் புயலில் சிக்கிய இலங்கை எனும் கப்பலை மீட்க எந்த கெப்டனும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க என்ற கெப்டன் கப்பலை கைப்பற்றி பாதுகாப்பாக துறைமுகத்திற்கு கொண்டு வர முடிந்தது. இப்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் கடலில் இறங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. அந்த கப்பலின் கெப்டன் பதவியை ரணில் விக்ரமசிங்கவிடம் திரும்ப ஒப்படைக்க உங்களால் முடியும். நன்றிக் கடன் செலுத்த நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அடுத்த ஐந்தாண்டுகளை அவர்களுக்கு கொடுத்துப் பார்க்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதற்காக உங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினால் இந்த நாடு மீண்டும் அழிவடைவதைத் தடுக்க முடியாது. இந்த நாட்டைக் காப்பாற்றக்கூடிய தலைவரையும் அழிக்கக்கூடிய தலைவரையும் இந்த நாட்டு மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். எனவே, மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு வேறு மாற்றீடான பெயர்கள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு வேறு மாற்றுவழியில்லை. ஒரே மாற்றுவழி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எனவே அடுத்த 05 வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைக்கும் பொறுப்பு உங்கள் கரங்களிலே உள்ளது. மாத்தறையில் இன்று தொடங்கிய பேரணியை வெற்றியுடன் நிறைவு செய்வோம்” என்று தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரன,
”நாட்டிற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நிர்க்கதியாய் தவித்த அந்த நாள் உங்களுக்கு நினைவிருக்கலாம். இன்று இந்நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையை எட்டியுள்ளது. அந்த சவாலான நேரத்தில் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் பொறுப்பேற்றிருக்காவிட்டால், நாட்டின் இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கவும் முடியாதது.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் அதிர்ஷ்டம் காரணமாக அந்த சவாலைக் கண்டு ரணில் விக்ரமசிங்க பின்வாங்கவில்லை. அதனால்தான் நாட்டுக்கு சரியான தலைமைத்துவம் கிடைத்தது.
அதனால்தான் இன்று வரிசைகளைக் காணவில்லை. எரிபொருள், மருந்துகள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்காக நீங்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றதை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நிலையை மறந்துவிடக் கூடாது. அந்த சூழ்நிலையை நீக்கியது யார் என்பதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இல்லையென்றால் இன்று நாம் அந்த நிலையில் இருந்து மீண்டிருக்க மாட்டோம் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,
”வாய்ப் பேச்சு வீரர்களும் ஜோக்கர்களும் காப்பாற்ற முடியாது என்று கூறிய நாட்டை ரணில் விக்கரமசிங்க இரண்டு வருடங்களுக்குள் பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தார். துன்பப்பட்ட மக்களைக் குணப்படுத்த அவர் நிபந்தனையின்றி உழைத்தார்.
அன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆண்டொன்றுக்கு அனுப்பிய 220 மில்லியன் டொலர்கள் தற்போது சுமார் 700 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. அன்று 73% ஆக இருந்த பணவீக்கம் இன்று ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 4500/- ரூபாவாக இருந்த எரிவாயு சிலிண்டர் இன்று 2982/- ரூபாவாகவும், 660/- ரூபாயாக இருந்த பருப்பு கிலோ 360/- ரூபாவாகவும் குறைந்துள்ளது.
இது கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்தின் இருப்பு நிலையை காட்டுகிறது. இன்று மக்கள் வரிசையில் இறப்பதில்லை. அன்று வங்குரோத்தடைந்த நாடாக இருந்தாலும், இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, மக்களின் காணி உரிமைக்கான காணி உறுதியை வழங்கி பாரிய சேவையாற்றி வருகின்றார்.
யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் ஒன்றுபட்டு மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தனர். இலங்கையில் பொருளாதாரப் போருக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்களிடமிருந்து அத்தகைய ஆதரவு கிடைக்கும். கடந்த காலங்களில் மதத்தையோ நாட்டையோ காப்பாற்றுவதற்காகவே தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த முறை உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளவே தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தவறான முடிவை எடுத்தால், உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். எனவே பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டை மீண்டும் ஒப்படைப்போம்” என்று தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
”மாத்தறை மாவட்டம் ஒவ்வொரு நாளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்ட மாவட்டமாகும். கடந்த இரண்டு வருடங்களாக நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அப்போது நாங்கள் அரசியலில் ஈடுபடுவதை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுசென்றோம். அப்போது இருந்த பிரச்சினைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று பலர் கூறினர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த சவாலை ஏற்று இரண்டு வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றினார்.
பேச்சுக்கே மட்டுப்படுத்தப்பட்ட தலைவர்களை எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யக் கூடாது. நமது எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவர் தேவை. இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அவருக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமையே மாறியிருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவோம். அந்த பயன்களை அடுத்த தேர்தலில் இழப்பீர்களா? இல்லையேல் இப்படியே தொடரலாமா என்று சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ரோஹன திஸாநாயக்க, கனக ஹேரத் விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரேமநாத். சி.தொலவத்த, தொழிற்சங்க விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய , ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.