புதுடெல்லி: இந்து மதத்தை இழிவுபடுத்திய ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம் அவர் நமது எல்லா கடவுள்களையும் காங்கிரஸ் கட்சியின் விளம்பரத் தூதுவர்களாக ஆக்கிவிட்டார். சிவனின் உயர்த்தப்பட்ட கைகள், காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் என்று சொல்கிறார். அல்லாஹ்வுக்காக உயர்த்தப்படும் கைகள் காங்கிரஸின் ‘கை’ என்று கூறுகிறார். இவை எல்லாம் ராகுல் கூறிய வார்த்தைகள். அவற்றைக் கேட்டு நாங்கள் ஏற்கெனவே சிரித்துக் கொண்டிருந்தோம்.
அவருடைய முக்கிய புகார், தான் வரும்போது பிரதமர் அவருக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதுதான். எனவே இது எத்தகைய ஸ்டாண்ட்-அப் காமெடி என்பதை இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
எப்போதும் கோயில்களுக்குள் இருக்கவேண்டிய கடவுள்களின் புகைப்படங்களை கொண்டு வந்து மேஜையின் மீது அவர் வைத்தார். அவர் இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டார். இந்து மதமும் அவற்றை பின்பற்றுபவர்களும் வன்முறையாளர்கள் என்று கூட சொன்னார். தன்னுடைய பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” இவ்வாறு கங்கனா தெரிவித்தார்.
முன்னதாக மக்களவையின் பேசிய ராகுல் காந்தி, “உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது” என்று தெரிவித்தார்.