மைடுகுரி: ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வடக்கு பகுதியில் திருமண விழா, மருத்துவமனை மற்றும் துக்க வீடு என பல்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான குவோசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பொது மருத்துவமனையில் தாக்குதல் நடந்துள்ளது. மூன்றாவது சம்பவம் துக்க வீடு ஒன்றில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி பெண்களும் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு போகோ ஹராம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் கிளர்ச்சியால் போர்னோ பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே பகுதியில் மற்றொரு ஆயுத குழுவான இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் (ஐஎஸ்டபிள்யூஏபி) என்ற குழுவும் இயங்கி வருகிறது.
மேலும், கடந்த காலங்களில் மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை நோக்கிய தங்களது தாக்குதலுக்கு போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளை கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் காரணமாக அந்த அமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2019-ல் ஒரே நேரத்தில் மூன்று தற்கொலை படை தாக்குதல் அந்த பகுதியில் நடத்தப்பட்டது. அதில் 30 பேர் உயிரிழந்தனர். கடந்த 2014-ல் குவோசாவை போகோ ஹராம் கைப்பற்றியது. கடந்த 2015-ல் அந்த நாட்டு ராணுவம் அந்த இடத்தில் மீண்டும் கைப்பற்றியது. இருந்தும் நகரப் பகுதிக்கு அருகில் உள்ள மலைகளில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுமார் இருபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.