புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாநில பாஜக தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி தனது அறையில் விவாதித்துள்ளார். இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு மாநிலத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இன்று இரவு டெல்லிக்கு பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் டெல்லி செல்கின்றனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் பதவி கோரினர். பின்னர் தங்களுக்கு அமைச்சர் பதவியும் கேட்டு வந்தனர். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். இவர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர். அந்தப் புகைப்படங்களை ராஜ்நிவாஸ் வெளியிடவில்லை. பாஜக எம்எல்ஏக்களும் அப்புகைப்படங்களை வெளியே தரவில்லை.
அதில் உச்சக்கட்டமாக இச்சந்திப்பு தொடர்பாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் நேரடியாக முதல்வர் மீது ஆளுநரிடம் குற்றம் சுமத்தியதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக, முதல்வர் எம்எல்ஏக்கள் கூட்டம் போடுவதில்லை. ரெஸ்டோ பார்கள் அதிகரித்துள்ளன. ரேஷன் கடையை திறக்கவில்லை. குப்பை வாருவதில் ஊழல் உள்ளது. பாஜக அமைச்சர்களை மாற்றவேண்டும்- வாரியதலைவர் பதவிகளையும் கோரியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸார் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் என முடிவு எடுத்தனர். ஆனால் அதுபோல் செய்யக் கூடாது என்று ரங்கசாமி குறிப்பிட்டுவிட்டார். இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று மதியம் முதல்வர் ரங்கசாமி வந்தவுடன் பாஜக மாநில த்தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி வந்தார். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முதல்வர் கேபினட் அறைக்கு சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ராஜ்நிவாஸ் சென்று பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து தன்னை குறைக்கூறியது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவரிடம் முதல்வர் கேட்டுள்ளார். குற்றம்சாட்டிய ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கு கார் தந்தது தொடங்கி தொகுதி திட்டங்கள் வரை பலதும் செய்துள்ளோம்.
இதுபற்றி கட்சி மேலிடத்தில் கேட்டு தகவல் சொல்லுங்கள் என்று மாநிலத்தலைவரிடம் முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கு மாநிலத் தலைவர் செல்வகணபதி, இவ்விவகாரம் தொடர்பாக கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளதாகவும், மீண்டும் பேசுவதாகவும் குறிப்பிட்டார்” என்றனர்.
இந்நிலையில், பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் இப்பிரச்சினை தொடர்பாக பாஜக தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க இன்று இரவு டெல்லி உள்ளதாக உறுதி செய்தனர்.