இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களான பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதிநியம் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில், முதல் நாளே பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023 இன் கீழ் முதல் எஃப்ஐஆர் (FIR) டெல்லியில் உள்ள கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, டெல்லி ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தைத் ஆக்கிரமித்து ஒருவர் விற்பனை செய்து வந்ததாக, பி.என்.எஸ் பிரிவு 285-ன் கீழ் சாலையோர வியாபாரி மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் பார்ஹ் பகுதியைச் சேர்ந்த பங்கஜ் குமார். இவர், பிரதான சாலையின் அருகே ஒரு வண்டியில் புகையிலை மற்றும் தண்ணீரை விற்றதாகவும், அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் அதிகாரி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வண்டியை அகற்றுமாறு அவரிடம் கூறியபோது, அகற்றமறுத்து தகராறில் ஈடுபட்டதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பாரதிய நியாய சன்ஹிதாவில் 358 பிரிவுகள் இருக்கின்றன. (ஐபிசியின் 511 பிரிவுகளுக்குப் பதிலாக). சன்ஹிதாவில் மொத்தம் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 33 குற்றங்களுக்கான சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, 83 குற்றங்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, 23 குற்றங்களில் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய சாக்ஷ்ய ஆதினியத்தில் 170 விதிகள் நடைமுறையில் உள்ளன. (முன்பிருந்த 167 விதிகளுக்குப் பதிலாக, மொத்தம் 24 விதிகள் மாற்றப்பட்டுள்ளன). இரண்டு புதிய விதிகள் மற்றும் ஆறு துணை விதிகள் சேர்க்கப்பட்டு ஆறு விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் மற்றும் சில சமூக அமைப்புகள் இதனை எதிர்த்தபோது, `பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் ஆகியவை, ஆங்கிலேய காலனித்துவ காலச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றியமைக்கும். பழைமையான சட்டங்களை புதுப்பித்து தற்போதைய நடைமுறைக்கு தேவையான சட்டங்களையும், பிரிவுகளையும் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என பாஜக தெரிவித்தது.
புதிய குற்றவியல் சட்டங்களின்படி, விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் ஒரு நீதிபதி தீர்ப்பை அறிவிக்க வேண்டும். முதல் விசாரணை முடிந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்த வேண்டும். `இந்த மாற்றம் விரைவான நீதி மற்றும் அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான முடிவு அவசரமானது, அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன் கூடுதல் ஆலோசனை தேவை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்களை அமல்படுத்த கூடாது. அவற்றை நாடாளுமன்றத்தில் மீண்டும் வாதிட்டு மறுபரிசீலனை செய்து, பின்னர் நன்கு ஆலோசனை செய்ய வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88