சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இலங்கை தமிழரான இவர், போதைப்பொருளைக் கடத்திய குற்றத்துக்காக கடந்த 2021-ம் ஆண்டு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காசிலிங்கத்தின் மனைவி கிருஷ்ணகுமாரி. காசிலிங்கம், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் சிறையிலிருந்தபடியே மனைவியிடம் வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தார். அப்போது சில ரகசிய வார்த்தைகளை காசிலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். அதுதொடர்பான தகவல் சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனால் காசிலிங்கத்தையும் அவரின் மனைவியையும் தங்களின் ரேடாரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொண்டு வந்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த 11-ம் தேதி சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைபொருள் கடத்தப்பட்டது. அதற்கான பணம் ஹவாலா மூலம் சென்னையில் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலை சேகரித்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன், தனி டீமை அமைத்து காசிலிங்கத்தின் மனைவி கிருஷ்ணகுமாரியை கண்காணித்தார். அப்போது ஒன்றரை கோடி ரூபாயை வாங்க சென்ற கிருஷ்ணகுமாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக இலங்கையைச் சேர்ந்த சிறுவன் உள்பட இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரியின் கூட்டாளி முகமது ரிசாலுதீன் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 2021-ம் ஆண்டு டிஆர்ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காசிலிங்கம் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை கைதிகள் தங்களின் உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேச வசதியுள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்திய காசிலிங்கம், தன்னுடைய மனைவி கிருஷ்ணகுமாரி மூலமாக போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் நடத்திய விசாரணையில்தான் தற்போது இந்த கைது நடவடிக்கைகயை மேற்கொண்டு பணம் மற்றும் 1.47 கிலோ போதைப் பொருள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.
இந்தக் கும்பலைத் தவிர இன்னொரு கும்பலும் போதைப் பொருளை மணிப்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த தகவல் கிடைத்தது. அதனால் அந்தக் கும்பலை ரகசியமாக கண்காணித்தோம். அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் ராயப்பேட்டை பீட்டர் சாலையில் காரில் போதை பொருளைக் கடத்தி சென்றுக் கொண்டிருந்தனர். உடனடியாக அந்தக் காரை மடக்கிப்பிடித்தோம். பின்னர் அந்தக் காரிலிருந்து 2.7 கிலோ போதை பொருளைப் பறிமுதல் செய்ததோடு போதைப் பொருளைக் கடத்திய குற்றத்துக்காக மூன்று பேரை கைது செய்துள்ளோம். இந்த இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 4.17 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்திருக்கிறோம். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.