வட கொரியாவில் கே-பாப் இசையை கேட்ட வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சியோல்:

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் அரசுக்கு எதிராகவோ, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராகவோ யாரும் எதுவும் பேச முடியாது. அந்த அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கொடூர தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. வட கொரியா மீது மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி, தென் கொரியாவின் கே-பாப் இசையை கேட்டதற்காகவும், தென் கொரிய திரைப்படங்களை பார்த்ததற்காகவும் 22 வயது வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெற்கு ஹவாங்கே மாகாணத்தைச் சேர்ந்த அந்த வாலிபர், 2022-ம் ஆண்டு 70 தென் கொரியப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று திரைப்படங்களைப் பார்த்ததாகவும், அவற்றைப் பகிர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக, வட கொரிய மனித உரிமைகள் பற்றி தி கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் இருந்து வெளியேறிய 649 பேரின் கருத்துக்கள் தி கார்டியன் வெளியிட்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கத்திய செல்வாக்கு மீதான வட கொரியாவின் ஒடுக்குமுறை குறித்து அவர்கள் கூறி உள்ளனர்.

அதில் ஒருவர், வட கொரியாவில் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று நினைத்ததாக கூறியிருக்கிறார். கொரிய நாடகங்களைப் பார்த்துவிட்டு, நாம் ஏன் இப்படி வாழ வேண்டும்? என்று பல இளைஞர்கள் ஆச்சரியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.