Mahua Moitra: `என்னை வெளியேற்றியதற்கு 63 MP-க்களை விலையாக கொடுத்திருக்கிறது பாஜக!' – மஹுவா மொய்த்ரா

2023 டிசம்பர் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டார். அது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் மீண்டும் வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டார்.

அவையிலிருந்து வெளியேறும் பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலிலும் வெற்றிப்பெற்று, மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா பேசுவதற்காக சபாநாயகர் பெயர் அறிவித்தவுடன் பிரதமர் மோடி அவையிலிருந்து வெளியேறினார்.

அப்போது பேசத் தொடங்கிய மஹுவா மொய்த்ரா,“பிரதமர் மோடி அவர்களே… இருந்து என் உரையைக் கேட்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நான் போட்டியிட்ட என் தொகுதிக்கு இரண்டுமுறை பிரசாரத்திற்காக வந்தீர்கள்.

ஆனால், மக்கள் என்னைதான் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்… பிரதமர் என் உரையைக் கேட்காதது என் துரதிஷ்டம்” என உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய மஹுவா மொய்த்ரா,“என் தொகுதியான கிருஷ்ணாநகர் மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. இந்து கடவுளின் பெயரான கிருஷ்ணாநகர் மக்கள்தான் மீண்டும் நான் நாடாளுமன்றத்திற்கு வருவதை உறுதி செய்திருக்கிறார்கள்.

மஹுவா மொய்த்ரா

கடந்த ஆட்சியில், நான் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, மக்களால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற உரிமை பறிக்கப்பட்டது. கருப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையிலும், எனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை இழந்தேன். ஆனால் நான் பயத்திலிருந்து விடுதலைப் பெற்றேன்… உங்களின் இதுபோன்ற அச்சமூட்டும் வேலைகளுக்கு பயப்படவில்லை. என்னை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியது போன்ற உங்களின் தொடர் அச்சமூட்டலால் 63 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்து பெரும்பான்மையை இழந்திருக்கிறீர்கள்.

நாடாளுமன்றம்

கடந்த முறை நான் பேச எழுந்தபோது ​​என்னைப் பேச அனுமதிக்கவில்லை. என்போன்றோரின் குரலை நசுக்கியதற்காக மிகவும் பெரிய விலை கொடுத்திருக்கிறீர்கள். அதனால் கடந்த ஆட்சியின்போது எதிர்க்கட்சிகளை நடத்தியது போல் பா.ஜ.க-வால் இப்போது நடத்த முடியாது. செங்கோல் முடியாட்சியின் சின்னம். அதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இந்த நாட்டின் ‘லோக் (மக்கள்) தந்திரத்தால்’ பா.ஜ.க-வின் ‘ராஜ தந்திரம்’ குறைந்து விட்டது. இந்த ஆட்சி நிலையான ஆட்சியல்ல. பல கூட்டணி கட்சிகளை நம்பிதான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் உரையில் ‘வட-கிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதில் ‘மணிப்பூர்’ என்ற வார்த்தைக்கூட உரையில் எங்கும் இல்லை. பிரதமர் பிரசாரத்தின் போதும் ‘முஸ்லிம்’, ‘மதரஸா’, மட்டன்’, ‘மச்சிலி (மீன்)’, ‘முஜ்ரா (ஒருவகை நடனம்)’ ‘மங்கள் சூத்ரா’ என்று M-ல் தொடங்கும் அனைத்து விஷயங்களையும் பலமுறை பேசினார். ஆனால் ஒரே ஒருமுறை கூட M-ல் தொடங்கும் ஒரு சொல்லை பயன்படுத்தவில்லை. அதுதான் அதுதான் ‘மணிப்பூர்’.

மஹுவா மொய்த்ரா

நீங்கள் கிழக்கு மாநிலங்களை பார்க்க மட்டும் வேண்டாம். அந்த மாநிலங்களில் அமைதி திரும்ப செயல்படுங்கள். அதுதான் எங்களுக்குத் தேவை. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற அரசின் கூற்றில் எவ்வளவு பொய். ‘நாரி சக்தி’க்கு பயந்துதானே பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தினீர்கள். இந்த முறை நாடாளுமன்றத்தில் 74 பெண் எம்.பி-க்கள் மட்டுமே இருக்கின்றனர்.

பா.ஜ.க-வின் 240 எம்.பி-களில் 30 பேர் மட்டுமே பெண்கள். ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்தது சரியான முடிவென்றால், பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக்-ரஜோரி போன்ற முக்கிய பகுதிகளில் ஏன் பா.ஜ.க வேட்பாளர்களை நிறுத்தவில்லை? தேர்தலின் போது ஆளும் அரசின், பிரதமரின் நடத்தை விதிகளின் மிக மோசமான மீறல்கல் குறித்த புகார்களுக்கு செவிசாய்க்காமல், கண்மூடித்தனமாகவும் செவிடாகவும் மாறி, ஒருதலைபட்சமாக செயல்பட்ட தேர்தல் ஆணையத்தை மீறித்தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மஹுவா மொய்த்ரா

இறுதியில், வாக்காளர்கள் பொறுப்பேற்று தேர்தல் ஆணையத்துக்கு தக்கப் பாடம் புகட்டினார்கள் என்பது நினைவுகூறப்படும். வந்தே பாரத் ரயில் திட்டத்திற்கு, 1.08 லட்சம் கோடி ரூபாய் செலவழித்திருக்கிறீர்கள். ஆனால், கடந்த ஆண்டு, பாலசோரில், கவச் (ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) இல்லாததால், மூன்று ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. கடந்த வாரம்கூட ரயில் விபத்து ஏற்பட்டது.

ஆனால், தற்போதைய நிதிநிலையில் அனைத்து ரயில்களிலும் ‘கவச்’ நிறுவமுடியாது என்றும், அதற்கு 50 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறுகிறீர்கள். எங்கள் விமானப் போக்குவரத்துத் துறை, உள்நாட்டின் அபாய மையமாக மாறியுள்ளது, புதிதாகக் கட்டப்பட்ட விமான நிலையங்களில் மேற்கூரைகள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. பிரகதி மைதான சுரங்கப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உள்கட்டமைப்பு மோசமாகத் திட்டமிடப்பட்டு, புகைப்படம் எடுப்பதற்காக வேகமாக கட்டி முடித்தால் இதுதான் நடக்கும்” எனக் காட்டமாக பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.