பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, 18-வது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தின் 6-வது நாளான இன்று, `ஜெய் சம்விதான் (அரசியலமைப்புச் சட்டம்)’ எனக் கூறி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவன், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகியோரின் உருவப்படங்களை காட்சிப்படுத்தி, “நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அகிம்சையை வலியுறுத்தி, இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அகிம்சையால் பயத்தைப் போக்கியிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்துக்கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு மற்றும் பொய்களைப் பரப்புவதல்ல.” எனக் கூறினார்.
அப்போது எழுந்து குறுக்கிட்ட பிரதமர் மோடி, “இது முழுக்க முழுக்க இந்து சமூகத்தின்மீதான தாக்குதல்…” எனக் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு, “அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் இந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள், அவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறாரா? தனது கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “பா.ஜ.க-வும், அதன் பிற அமைப்புகளும், பிரதமர் மோடியும் முழு இந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளல்ல என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்துகிறேன்.” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் பிரியாங்கா காந்தி ,“எனது சகோதரர் ராகுல் காந்தி ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராக பேச மாட்டார். நாடாளுமன்றத்தில் அவர் என்ன பேசினார் என்பது மக்களுக்கு தெரியும். ராகுல் காந்தி குறிப்பிட்ட வெறுப்புப் பேச்சுகளைப் பேசும் பா.ஜ.க தலைவர்களைப் பற்றிதான் பேசியிருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.