உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த 9வது டி20 உலகக்கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி வென்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்று தொடங்கி, அரையிறுதி, இறுதிப் போட்டி வரை மேற்கிந்தியத் தீவுகளில்தான் நடைபெற்றது. தற்போது அங்குத் தங்கியிருக்கும் இந்திய வீரர்கள் நாடு திரும்புவது தாமதமாகி உள்ளது.
காரணம், இந்திய வீரர்கள் தங்கியுள்ள பார்படாஸில் சூறாவளி உருவாகியுள்ளது. இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் உள்ள கடற்கரை அருகே உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். மழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் தங்கியுள்ள விடுதிகளில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி விமான நிலையத்தில் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்திய அணி திட்டமிட்டபடி அமெரிக்காவின் நியூயார்க்குக்குச் செல்ல முடியவில்லை. நியூயார்க்கிலிருந்து துபாய் வழியாக டெல்லி திரும்பத் திட்டமிட்ட நிலையில் தற்போது இந்தப் பயணத் திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகளிலிருந்தே டெல்லிக்குத் தனி விமானம் மூலம் இந்திய அணியை அழைத்து வர இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் எனக் கிட்டத்தட்ட 70 பேர் அங்கே உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.