கண் சிமிட்டுவது என்பது இயற்கையான ஒரு செயல். கண்களைச் சிமிட்டாமல் இருக்க யாராலும் முடியாது. கண்களைச் சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பதத்துடன் இருக்கின்றன மற்றும் கண்களின் மேற்பகுதி சுத்தமாகிறது. ‘இது சரியா?’ என்று சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் டாக்டர் திரிவேணி விளக்குகிறார்.
“கண்களைச் சிமிட்டுதல் என்பது மனித இயல்பு. சராசரியாக பெரியவர்கள் நிமிடத்திற்கு 14 அல்லது 16 முறை கண்களைச் சிமிட்ட வேண்டும். இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கண்களைச் சிமிட்டினால், கண்களில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இயற்கையாகவே நம் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் (Lacrimal Gland) இருக்கும். இந்தப் பகுதியானது கண்களில் கண்ணீரைச் சுரந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை கண்களை இமைக்கும்போதும் கண்ணீரானது கண்களில் படரும். பார்வை நன்றாகத் தெரிய வேண்டுமென்றால் கண்களில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கருவிழி சமநிலையில் இருக்கும். கண்சிமிட்டுதல் இல்லையெனில் கண்களில் உலர் திட்டுகள் (dry spot) உருவாகும்.
அவ்வாறு உருவாகும்போது பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எனவே, கண்ணீரானது (tears) கண் பார்வைக்கு மிகவும் அவசியமானது. நம் உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் வழியாகத்தான் ரத்த ஓட்டம் செல்கிறது. நம் உடலில் ரத்த ஓட்டம் செல்லாத பகுதி என்றால் கருவிழிதான். கண்ணீர் வழியாகத்தான் கருவிழிக்கு ஆக்ஸிஜன் செல்கிறது. நாம் கண்களை அடிக்கடி இமைக்கும்போது கண்ணீரானது ஒரு படலமாக கருவிழி மீது உருவாகிறது. கண்ணீரின் மூலம் ஆக்ஸிஜனை கருவிழி எடுத்துக் கொண்டு கண்பார்வையை மேம்படுத்துகிறது.
அளவுக்கு அதிகமாக கண் இமைத்தாலும் பிரச்னை இமைக்காவிட்டாலும் பிரச்னை. அளவுக்கு அதிகமாக கண் இமைக்க , கண்களில் ஏற்படும் அழற்சி, தொற்று நோய், உலர்தன்மை, கண்களில் பிசிறு, கிட்டப்பார்வை (myopia), நரம்பியல் பிரச்னை (neurological problem) போன்றவை காரணங்களாக இருக்கலாம். இது போன்ற பிரச்னைகள் இருப்பின் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டரில் அதிகநேரம் வேலை பார்ப்பதால் கண்களில் வறட்சி ஏற்படலாம். கண்களின் ஏற்படும் உலர்தன்மையை சரி செய்வதற்கு முதலில் மருத்துவரை அணுகி, தகுந்த சொட்டு மருந்தை (Lubricant Eye drops) பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை முறையை சற்று மாற்றிக் கொள்வது நல்லது. கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் . ஆன்டி ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் கண்ணாடிகளை (Anti Reflective Coating Glasses) பயன்படுத்த வேண்டும்” என்கிறார் மருத்துவர்.
– ம.தேவிபிரியா