புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்தரஸின் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு காரணமான ‘போலே பாபா’ என்று அழைக்கப்படும் ஆன்மிக குரு, 18 வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேச காவல் துறையின் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்ட இவரது பின்னணி இது…
உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள காஸ்கன்சின் பட்டியாலி கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் பால். காவல் துறையில் சாதாரணக் கான்ஸ்டபிளாக இருந்தவருக்கு ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஆர்வம் வளர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு வகை துறவிகளை பார்த்தவருக்கு, தானும் அதுபோல் மாற வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது. ஆனால், அவர்கள் போல் காவி நிற உடைகள் அணியாமல், சாதாரண மனிதராக இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேச காவல் துறையின் உளவுத் துறையில் பணியாற்றிவர். அதை உதறி தள்ளிவிட முடிவு செய்துள்ளார். கான்ஸ்டபிள் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற சூரஜ் பால், வேலையில் இருந்த போதே சிறிய ஆன்மிகப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளார். இதற்கு கிராமப்புறங்களில் கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகப்படுத்தி உள்ளது.