- இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தி இரங்கலைத் தெரிவித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
நான் இந்த உரையாற்றும் போது, அன்று என்னுடன் பாராளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.
மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.
ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார். அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்.