சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்குச் சென்ற ஹரி, இரட்டைக் கொலை நடந்த அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது இரண்டு பேர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தமிழரசன் எனத் தெரியவந்தது. அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீஸார் கூறுகையில், “பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோனு (எ) கோபாலகிருஷ்ணன். இவர், கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தார். கோபாலகிருஷ்ணனிடமிருந்து அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை (23), ஜில்லா (எ) தமிழரசன் (23) ஆகியோர் போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார்கள். இதையடுத்து அண்ணாமலையும் தமிழரசனும் தனியாக போதைப் பொருள்களை விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
அதனால் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன், இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தனக்குத் தெரிந்த ஆட்டோ டிரைவர் ஹரியை தொடர்பு கொண்டு சவாரிக்கு வரும்படி அழைத்திருக்கிறார். பின்னர் ஹரியின் ஆட்டோவில் அண்ணாமலை மற்றும் சிலர் ஏறியிருக்கிறார்கள். அவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அதுகுறித்து ஹரி கேட்டபோது அண்ணாமலை நீ ஆட்டோவை மட்டும் ஓட்டு என மிரட்டியிருக்கிறார். அதனால் ஹரியும் வேறுவழியின்றி ஆட்டோவை ஓட்டிச் சென்றிருக்கிறார்.
குண்டு மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்ற கோபாலகிருஷ்ணன் அங்கு தன்னுடைய கூட்டாளிகளுடன் இறங்கியுள்ளார். அங்கு அண்ணாமலை, தமிழரசன் ஆகியோர் இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த கோபாலகிருஷ்ணன் தலைமையிலான டீம், கத்தி, இரும்பு ராடால் அண்ணாமலை, தமிழரசனை அடித்து உதைத்தனர். பின்னர் குண்டு மேடு சுடுகாட்டில் வைத்து இருவரையும் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ஹரி அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஆட்டோவில் காவல் நிலையத்துக்கு வந்து தகவல் தெரிவித்தார். அதன்அடிப்படையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரின் கூட்டாளிகளைத் தேடி வருகிறோம்” என்றனர்.
போதைப் பொருள் விற்பது தொடர்பாக நடந்த போட்டியில் இரட்டைக் கொலை நடந்த சம்பவம், சென்னை புறநகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.