நம்மைச் சுற்றி நாளும் வலம்வரும் காதல் கதைகள் ஏராளம். அவற்றில் சில கதைகள் நம்மைப் புன்னகைக்கச் செய்யும், சில அமைதிப்படுத்தும், சில துயரை அளிக்கும், சில கதைகளோ மனதில் பதிந்து நீங்கா இடம் பிடிக்கும். அப்படி நீங்கா இடம் பிடித்த காதல் கதைதான் ஜப்பானில் நடந்திருக்கிறது.
2011-இல் ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகினர். நவீன ஜப்பானின் வரலாற்றில் நீங்காத துயரத்தை இந்த ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. இந்த இயற்கைப் பேரிடரில் தங்கள் அன்புமிக்கவர்களை இழந்த குடும்பத்தினர் மீதமிருக்கும் நாள்களைத் துயர்மிக்க நாள்களாகவே கடந்துகொண்டிருக்கின்றனர். சிலரோ மாயமானவர்கள் திரும்ப வருவார்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
யாசோ தகமாட்சு, சுனாமியின்போது மாயமான தன் மனைவி யூகோவை 13 வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார். இதற்காக ஆழ்கடலில் நீந்த பயிற்சி எடுத்த யாசோ 100 முறைக்கு மேலாக ஆழ்கடலில் நீந்தித் திரும்பி இருக்கிறார். இதுவரை யூகோவின் சடலம் கிடைக்கவில்லை. எனினும் தன் மனைவி மீது கொண்டிருந்த நீங்காத காதலால் மனம் தளராமல் ஆழ்கடலில் யாசோ நீந்திக்கொண்டிருக்கிறார்.
யாசோவின் முயற்சிக்கு பலனாக யூகோவின் திறன்பேசி அவர் பணி செய்த இடத்திற்கு அருகில் கிடைத்தது. அதுவே யாசோவுக்கு கிடைத்திருக்கிற சிறு ஆறுதல். “கடலில் நீந்துவது கடினமாகத்தான் உள்ளது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. என் மனைவியின் சடலத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என விரும்புகிறேன்” என்று தன் தேடல் குறித்துக் கூறும் யாசோ, கடலில் நீந்தும்போது தன் மனைவி அருகில் இருப்பதுபோல் உணர்வதாகக் கூறுகிறார். இவரது தேடலும் காத்திருப்பும் ‘நீர்ப்பறவை’ படத்தின் நந்திதா தாஸ் கதாபாத்திரத்தை நினைவூட்டக் கூடும்.