புதுடெல்லி: “சமூக நீதியை அடைவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே ஒரே வழி” என்று மக்களவையில் ஆசாத் சமாஜ் (கன்ஷிராம்) கட்சி எம்.பி. சந்திரசேர் ஆசாத் வலியுறுத்தினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாய்க்கிழமை உரையாற்றிய சந்திரசேகர் ஆசாத், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே சமூக நீதியை அடைவதற்கான ஒரே வழி. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். பாஜகவின் ‘சப்கா சத் சப்கா விகாஸ்’ என்ற முழக்கம் தேர்தல் ஆதாயத்துக்கான வெறும் கோஷங்கள் மட்டுமே. ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் சாதி மற்றும் மத ரீதியிலான சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
சீனா தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நமது எல்லைக்குள் ஊடுருவுகிறது. நாம் அக்னி வீரர்கள் திட்டத்தினை விரைவில் கைவிட்டுவிட்டு ஆயுதப்படைக்கு ஆட்களை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே நடக்கும் சாதி ரீதியிலான கொடுமைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
முன்னதாக இன்று காலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது ராகுல் காந்தியின் உரையை நீக்கியது குறித்து கருத்து தெரிவித்த ஆசாத், “பெரும்பாலான மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கிறார்கள். நான் அதைப் பற்றி விவாதிக்க இங்கே (நாடாளுமன்றத்துக்கு) வந்துள்ளேன். யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் நன்றாக தெரியும். நான் பேசும் மக்கள் பற்றி பேச யாரும் இல்லை” என்றார். அக்னி வீரர்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு, “அந்த விஷயம் கட்டாயம் எழுப்பப் படவேண்டும். மக்கள் தொடர்பான பிரச்சினைகள் எழுப்பப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.