தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 விரைவு ரயில்களில் 2 நிமிடங்களில் முடிந்த டிக்கெட் முன்பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவுரயில்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்தன.

குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய 3 ரயில்களில் 2 நிமிடங்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலை காட்டியது.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை அக். 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அக்.28-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில், பண்டிகைக்கு இரண்டு நாள் முன்பாக, அக்.29-ம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.



ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.

குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களுக்கு முறையே புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இரண்டு நிமிடங்களிலேயே முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது. இந்த மூன்று ரயில்களில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, ரெக்ரெட் (regret) என்று வந்தது.

இதேபோல, முத்துநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி, மலைக்கோட்டை ஆகிய விரைவு ரயில்களில் முறையே 291, 220, 361, 140 என காத்திருப்போர் எண்ணிக்கை இருந்தது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிந்தது. இதுதவிர, சென்னையில் இருந்துபுறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களிலும் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலை அடைந்தது.

முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட்விரைவாக விற்றுதீர்ந்தன. மற்ற வகுப்புகளிலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி டிக்கெட் முன்பதிவு பொருத்தவரை, 84 சதவீதம் டிக்கெட் முன்பதிவு இணையதளம் மூலமாகதான் நடைபெற்றுள்ளது. அக்.30-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பண்டிகை காலத்தில் பயணிகளின் தேவையை ஆராய்ந்து, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றார் அவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.