தூத்துக்குடி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுவதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் நேற்று இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார் அவருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கென ஒரு விதிமுறை இருக்கிறது, நடைமுறை இருக்கிறது. அது மீறி ராகுல் காந்தி படத்தைக் காட்டி படம் காண்பித்து கொண்டிருந்தார்.
மூன்று அமைச்சர்கள் எழுந்து ராகுல் காந்திக்கு பதில் கூறியதை எதிர்மறையாக கூறுகிறார்கள். ராகுல் எல்லாவற்றையும் தவறாக சொல்லும் போது அமைச்சர்கள் எழுந்து குறுக்கிட்டு பதில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாட்டுக்காக உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற தவறான தகவலை ராகுல் காந்தி கூறினார். அதற்கு மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அவர்களது குடும்பத்துக்கு ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்களது உயிர்களுக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவாக கூறினார்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதாக தவறான தகவலையும் ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கும் அமைச்சர் பதில் அளித்துள்ளார். ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உள்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் முதல் பேச்சிலேயே இப்படித்தான் பேச வேண்டும் என முடிவு செய்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கத்திலேயே எதிர்மறையாக பேசியுள்ளார். இது அவரது பயிற்சியின்மை, முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
இந்துக்களின் உணர்வுகள் புண்படும் வகையில் ராகுல் காந்தி பேசிய போது தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்பிக்கள் ஒரு எதிர்ப்புக் குரல் கூட கொடுக்காமல் அமர்ந்திருந்தது தான் வேதனை அளிக்கிறது. இந்த 40 பேர் நாடாளுமன்றத்துக்கு சென்றதால் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை. இவர்கள் வெறுமனே கூச்சல்தான் போடுவார்கள். ஆனால் இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியும், பிரதமரும் தயாராக இருப்பார்கள் என்பதுதான் எனது கருத்து.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தமிழகத்தில் திமுக ஆட்சி வருவதற்கு முன்பாக மதுவிலக்கு பற்றி அவ்வளவு பேசினார்கள் ஆனால் தற்போது பத்திரிக்கையாளர்களைக் கூட சந்திக்க முடியாமல் பறந்து போய் இருக்கிறார். சொன்னதை எதையும் செய்யாமல் தான் அவர் இருக்கிறார். அதற்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு முதலமைச்சரோ சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. குற்றம் செய்கிறவர்கள் பயப்படுகிறார்களோ இல்லையோ, தமிழக அரசு பயப்படுகிறது. சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும். மத்திய அரசு தானாக உத்தரவிட முடியாது. அந்த வகையில் தான் சட்டம் உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.