புதுடெல்லி: ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, ராமநாதபுரம் தொகுதி தொடர்பான பல்வேறு ரயில்வே கோரிக்கைகளுக்காக மனு அளித்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவரும், எம்பியுமான கே.நவாஸ்கனி அளித்த கடிதத்தின் விவரம்: பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவடையவில்லை. அது, இன்னும் திறக்கப்படாமல் இருப்பதினால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், ராமேஸ்வரம் பகுதிக்கு செல்லும் பயணிகள், அங்குள்ள திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, பாம்பன் ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தங்கச்சிமடம் ரயில் நிலையம் 1992 வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த ரயில் நிலையம் செயல்படாமல் இருக்கிறது. அந்த வழியாக பல்வேறு ரயில்கள் கடந்து சென்றாலும் அந்த ரயில் நிலையம் செயல்பாட்டில் இல்லாததால் அந்த பகுதியில் ரயில்கள் நிற்காமல் செல்வதால் பகுதி மக்கள் பெரிதும் வருந்துகின்றனர். மேலும், தங்கச்சிமடம் பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது, 30 ஏக்கர் காலி இடமும் அங்கு உள்ளது. அந்த இடத்தில் ரயில்வே யார்ட் அமைக்கவும் சாத்தியக்கூறுகள் தெரிவதால் அதை, பரிசீலனை செய்ய வேண்டும். கரோனா பொது முடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பட்டியலில், சிலம்பு விரைவு வண்டி (16181/16182) ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி அல்லது திருச்சுழி ரயில் நிலையத்தில் நிறுத்தம் உள்ளன.மேலும், ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் வண்டி சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் நிறுத்தம், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் நிறுத்தம் ஆகியவைகளும் உள்ளன.
ராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம், ராமேஸ்வரம்- சென்னை சேது விரைவு வண்டி மண்டபம் ரயில்நிலையத்தில் நிறுத்தம், ராமேஸ்வரம் – அஜ்மீர் (20973/20974) தொடர்வண்டி ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிறுத்தம் ஆகியவைகளும் உள்ளன. ராமேஸ்வரம் – அயோத்தியா (22613/22614) தொடர்வண்டி ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிறுத்தம், ராமேஸ்வரம் – பனாரஸ் (22535/22536) தொடர்வண்டி ராமநாதபுரத்தில் நிறுத்தம், ராமேஸ்வரம்- புவனேஸ்வர் (20895/20896) தொடர் வண்டி அனக்காப்பள்ளி ரயில் நிலைய நிறுத்தம் ஆகியவைகளும் உள்ளன. இவை அனைத்தின் உள்ளிட்ட ரயில்களை குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். வணிகரீதியிலும் பெரும்பான்மையானோர் பயனடைவார்கள். எனவே, இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகள் மிகவும் பழைய பெட்டிகளாக இருப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
ரயில் பெட்டிகளை மாற்றி புதிய பெட்டிகளாக அமைக்க நெடுநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சென்னை- ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறந்தாங்கி மக்கள் அறந்தாங்கி வழியாக கூடுதலாக ரயில்களை இயக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு வண்டி இயக்க வேண்டும்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக கரைக்குடிக்கு ரயில் வழித்தடம் மின்மயமாக்கல் திட்டமிடப்பட்டும் தாமதமாகி கொண்டுள்ளது . அதனை துரிதப்படுத்த வேண்டும் . செங்கோட்டை தாம்பரம் வாராந்திர 3 நாள் ரயில்களை தினசரியாக இயக்க வேண்டும் . திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் .காரைக்குடி – மயிலாடுதுறை சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நேரடி ரயில் மீண்டும் இயக்கப்பட வேண்டும். காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை வழியாக எழும்பூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு வண்டி அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கி பகுதியிலிருந்து பொதுமக்கள் திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு அதிகம் பயணிக்க கூடியவளாக இருக்கிறார்கள்.எனவே அறந்தாங்கி வழியாக திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறந்தாங்கி பகுதியில் ரயில்வே சரக்கு யார்ட்டு அமைப்பது பராமரிப்பு பணிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அறந்தாங்கி பகுதியில் ரயில்வே சரக்கு யார்ட்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும். இதற்காக, மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.