சிங்கப்பூர்: கேரளாவைச் சேர்ந்தவர் அண்ணாமலை கோகிலா பார்வதி (35). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் சிங்கப்பூர் நகரின் இஸ்தானா என்ற பகுதியில் வேறு 2 பெண்களுடன் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்த ஊர்வலத்தில் 70-க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். போலீஸாரின் முன் அனுமதி பெறாமல் இந்த போராட்டத்தை அவர் நடத்தியுள்ளார். முன் அனுமதியின்றி சிங்கப்பூரில் போராட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் உள்ள தனது தாத்தா, பாட்டியை பார்க்க சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்காக ஜாமீன் மனு தாக்கல் செய்வதாகவும் அண்ணாமலை கோகிலா பார்வதி தெரிவித்தார். ஏற்கெனவே கேரளா செல்வதற்காக விமான டிக்கெட்டை பதிவுசெய்திருப்பதாகவும் அண்ணாமலை கோகிலா பார்வதி தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி லோரைன் ஹோ, அவர் கேரளா செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
கோகிலா பார்வதி ஏற்கெனவேபல முறை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அவர், அனுமதியின்றி பிற பொதுக்கூட்டங்கள் நடத்தியதாகவும், பேரணி நடத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதற்காக 2017, டிசம்பர் 5-ம் தேதிஅவருக்கு கடுமையான எச்சரிக்கையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மீண்டும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அவருக்கு அடுத்த 24 மாதங்களுக்கு நிபந்தனை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.