நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலளிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, பா.ஜ.க-வும், அதன் தலைவர்களும் வகுப்புவாத பிளவுகளை வளர்ப்பதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தி பேசிய, இந்து, மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற உரையின் சில பகுதிகள் நாடாளுமன்ற செயலகத்தால் நீக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “ நாடாளுமன்ற நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 380-ல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை நீக்குவதற்கான அதிகாரங்களை சபாநாயகர் பெறுகிறார். நேற்று நான் பேசியவைகளின் எந்தப் பகுதியும் விதி 380-இன் கீழ் வராது. ஆனால், என் உரையின் சிலப் பகுதிகள் நீக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
கள நிலவரத்தையும் உண்மையையுமே இந்த அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். மக்களின் குரலாக ஒவ்வொரு உறுப்பினரும் இந்திய அரசியலமைப்பின் 105(1) வது பிரிவின் கீழ் அவையில் பேச சுதந்திரம் உள்ளது. மக்கள் பிரச்னைகளை அவையில் எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரின் உரிமை. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் செயலிலேயே நேற்று நான் ஈடுபட்டேன்.
எனது கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது. அதே நேரம் மத்தியமைச்சர் அனுராக் தாக்குரின் பேச்சை குறிப்பிட விரும்புகிறேன். அவரின் பேச்சுகள் முழுவதிலும் குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்த நிலையில், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டது ஆச்சரியமளிக்கிறது. அவை நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்ட எனது கருத்துகளை மீண்டும் சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் உலகில் நான் பேசிய உண்மைகளை நீக்க முடியும். ஆனால், உண்மையில் உண்மையை யாராலும் அழிக்க முடியாது. நான் என்ன கூறினேனோ, என்ன கூறுகிறேனோ, என்னக் கூறவிருக்கிறேனோ அது அனைத்தும் உண்மை மட்டும்தான். அதை யாராலும் நீக்கவோ, அழிக்கவோ முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88