விராட் கோலியும் தோனியும் நண்பர்களுக்கும் மேல் சகோதரரை போல பழகுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி 2017ம் ஆண்டு விராட் கோலியிடம் தனது கேப்டன்சியை ஒப்படைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்காக தோனி செய்த முக்கியமான விஷயம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், கோலி மற்றும் தோனி சம்பந்தப்பட்ட கடந்தகால சம்பவம் ஒன்றை பற்றி தற்போது பேசியுள்ளார். பாகிஸ்தானில் செயல்படும் ஒரு யூடியூப் சேனலில் பேசிய அக்மல், இந்திய அணிக்குள் நடைபெற்ற ஒரு நிகழ்வை பற்றி பேசியுள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் அவர் பயணிக்கும் போது, இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று அணியின் மேலாளர் தோனியிடம் கூறியதாகவும், அந்த சமயத்தில் தான் அங்கு இருந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அந்த நேரத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார். கோலியை நீக்கினால் கேப்டன் பதவியில் இருந்து நானும் விலகுவேன் என்று தோனி அந்த மேலாளரிடம் தெரிவித்ததாக அக்மல் பேசியுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக அக்மல் தெரிவித்தார். “நாங்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தோனி, ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் சோயப் மாலிக் உடன் இருந்தனர். அந்த தொடரை நாங்கள் வென்றோம். இதனால் விராட் கோலிக்கு அதிக அழுத்தம் இருந்தது.
அந்த சமயத்தில் அணியின் மேலாளர் தோனியிடம் வந்து, இறுதி ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட வேண்டாம் என்று தெரிவித்தார். அப்போது நான் தோனியைப் பார்த்தேன், அவர் மேலாளரிடம் ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டேன். ரெய்னா கேப்டனாக இருப்பார், உடனே இரண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள் என்று சட்டென கூறினார். இதனை கேட்டதும் பதறிப்போன மேலாளர் அடுத்த வார்த்தை பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். எதற்கு அப்படி சொன்னீர்கள் என்று நான் தோனியிடம் கேட்டேன். அப்போது தோனி, விராட் கோலி சிறந்த வீரர் என்றும், மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமே தவிர, நீக்க கூடாது என்று தோனி தெரிவித்தார்” என்று அக்மல் கூறினார்.
“I was having dinner with MS Dhoni. Team manager came & told him to drop Virat but Dhoni said then I’ll also not play. Make someone else the captain”
~Umar Akma
Never dropped players, The O
pic.twitter.com/B5LstqyIy8
— Hustler (@HustlerCSK) July 1, 2024
இதன் மூலம் சவாலான சூழ்நிலைகளில் கோலிக்கு தோனி அசைக்க முடியாத ஆதரவை தந்துள்ளார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இந்த சம்பவம் கோலியின் மேல் தோனி கொண்டிருந்த நம்பிக்கையையும் மரியாதையும் காட்டுகிறது. தற்போது விராட் கோலி உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்து சரித்திர சாதனை படைத்துள்ளார் கோலி. இந்த உலக கோப்பையுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி இன்னும் சிறிது காலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார்.