“3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு வேகம் காட்டுவோம்!” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும், “எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம்” என்று அவர் உறுதியளித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரை: “குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்தை விரிவுபடுத்தியுள்ளார். அவர் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். அவர் நம் அனைவருக்கும், நாட்டுக்கும் வழிகாட்டியுள்ளார். அதற்காக குடியரசுத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகிலேயே மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நமது நாடு உலகுக்குக் காட்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து பொய்களை பரப்பியும் கூட கடும் தோல்வியை சந்திக்க நேரிட்டதால் சிலர் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரச்சாரத்தில் மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவை செய்ய நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். இது ஜனநாயக உலகுக்கு மிகவும் முக்கியமான மற்றும் பெருமையான நிகழ்வாகும்.



ஒவ்வொரு சோதனையிலும் எங்களை சோதித்த பிறகே நாட்டு மக்கள் எங்களுக்கு இந்த ஆணையை வழங்கியுள்ளனர். எங்களின் 10 ஆண்டு கால சாதனையை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

2014-ல் நாங்கள் முதல்முறையாக வெற்றி பெற்றபோது, ​​ஊழலைப் பொறுக்கமாட்டோம் என்று தேர்தல் பிரச்சாரத்திலும் தெரிவித்திருந்தோம். எங்களின் ஒரே நோக்கம் ‘முதல் தேசம்’ என்பதே. எங்கள் பணிகள், படிகள் மற்றும் கொள்கைகள் இந்த நோக்கம் மற்றும் இலக்கை நோக்கியே உள்ளன. நாட்டின் நலனுக்காக தேவையான ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நாங்கள் செய்துள்ளோம் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிரான எங்கள் கொள்கை காரணமாகத்தான் நாடு எங்களை ஆசிர்வதித்துள்ளது.

இந்திய மக்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவர்கள் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. இத்தேர்தலில் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற பெரிய உறுதியுடன் பொதுமக்கள் மத்தியில் சென்றிருந்தோம். வளர்ந்த இந்தியாவுக்கான எங்கள் உறுதிப்பாட்டுக்காக நாங்கள் ஆசிகளை நாடியிருந்தோம். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அர்ப்பணிப்புடனும், நல்லெண்ணத்துடனும், சாமானியர்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுமக்கள் மத்தியில் சென்றோம்.

இன்று, உங்கள் மூலம், முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும், வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற நமது நேரத்தின் ஒவ்வொரு நொடியையும், நமது உடலின் ஒவ்வொரு துகளையும் அர்ப்பணிப்போம். வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற எந்த ஒரு வாய்ப்பையும் விடமாட்டோம் என்று எனது நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். 2047-க்கு 24×7 வேலை செய்வதாக உறுதியளித்துள்ளோம்!

2014-ஆம் ஆண்டில், நாட்டு மக்கள் சேவை செய்வதற்காக எங்களைத் தேர்ந்தெடுத்தனர். அந்த தருணம் நாட்டின் மாற்றத்துக்கான சகாப்தத்தின் தொடக்கமாகும். இன்று எனது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுள்ளது. ஆனால், அனைத்து சாதனைகளுக்கும் வலு சேர்த்த ஒரு சாதனை, நாடு விரக்தி எனும் பள்ளத்தில் இருந்து வெளியே வந்து நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறது.

2014-க்கு முன், பயங்கரவாதிகள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக தாக்குதல் நடத்த முடிந்தது. அப்பாவி மக்கள் உயிரிழப்பது வாடிக்கையாக இருந்தது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரசுகள் வாய் மூடி மவுனிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால் 2014-க்கு பிறகு இந்த புதிய இந்தியாவுக்குள் நுழைந்தால் உயிருடன் திரும்ப முடியாது என்ற நிலை உருவானது. இந்தியா தனது பாதுகாப்புக்காக எதையும் செய்யும் என்பதை இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்கிறார்.

வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ஆட்சியாளர்கள் வணங்கிக் கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முடியாத நிலையை அதன்மூலம் உருவாக்கினர். 370 சகாப்தத்தில், ராணுவத்தின் மீது கற்கள் வீசப்பட்டன. மக்கள் விரக்தியில் இருந்தனர். இப்போது அதுபோன்ற சம்பவங்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்க முடியாது. இன்று சட்டப்பிரிவு 370-ன் சுவர் இடிந்து விழுந்து, கல் வீச்சு நிறுத்தப்பட்டு, ஜனநாயகம் வலுப்பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிக்க முன்வருகின்றனர்.

ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு வெற்றியையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். 10 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாற்றினோம். இப்போது, ​​நாம் முன்னேறி வரும் வேகம் விரைவில் நம் நாட்டை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக பிரகாசிக்கச் செய்யும். எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம் என்பதாகும். எங்கள் 3-வது பதவிக்காலம் என்பது 3 மடங்கு சக்தியை புகுத்துவோம் என்பதாகும். எங்கள் 3-வது தவணை என்றால் 3 மடங்கு முடிவுகளைக் கொண்டு வருவோம் என்பதாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த நல்ல அதிர்ஷ்டம் நாட்டுக்கு வந்துள்ளது. ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சிக்கான ஆணையை பொதுமக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் சில விஷயங்கள் மக்கள் பார்வையில் இருந்து மறைந்து விட்டன. மக்களவைத் தேர்தலுடன், நம் நாட்டில் 4 மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த நான்கு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. நாங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். மஹாபிரபு ஜகந்நாதரின் பூமியான ஒடிசா, எங்களை மிக அதிகமாக ஆசிர்வதித்துள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளோம். சிக்கிமிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த முறை கேரளாவில் பாஜக தனது கணக்கைத் திறந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த எங்கள் எம்.பி.க்கள் மிகுந்த பெருமையுடன் எங்களுடன் அமர்ந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த முறை இருந்ததை விட இம்முறை பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 தேர்தலில் காங்கிரஸுக்கு நாட்டு மக்கள் ஓர் ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணை என்னவென்றால், வாக்குவாதம் முற்றும் போது எதிர்க்கட்சியில் அமர்ந்து கத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். தேர்தலில் காங்கிரஸ் 100-ஐ தாண்டாதது தொடர்ந்து மூன்றாவது முறையாகும். காங்கிரஸின் வரலாற்றில் இது மூன்றாவது பெரிய தேர்தல் தோல்வியாகும்.

காங்கிரஸ் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, பொது அமைதியை மனதில் கொண்டு, சுயபரிசோதனை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் தலைகீழ் விமர்சனத்தில் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் எங்களை தோற்கடித்துவிட்டது போன்ற ஓர் எண்ணத்தை மக்கள் மனதில் திணிக்க இரவு பகலாக முயற்சி செய்கிறது.

காங்கிரஸ் சிறு குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. ஒரு குழந்தை இருக்கிறது. அவர் (ராகுல் காந்தி) தனது 99 மதிப்பெண்களை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது ஆசிரியர் ஒருவர் ஆச்சரியப்பட்டு, ஏன் கொண்டாடுகிறீர்கள்? கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்ல விரும்பினார். அவர் பெற்ற ’99’ மதிப்பெண்கள் 100-க்கு இல்லை, ஆனால் ‘543’-க்கு மேல்! ஆனால், அந்த ஒரு குழந்தையின் புத்திக்கு யார் அதைப் புரிய வைக்க முடியும்?” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.