தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001- 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.26 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு உதவுவதற்காக தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தரப்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணையின் போது, “இந்த வழக்கு விசாரணையில் உதவுவதற்காகவே நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி அதிகமான சொத்துக்கள் சேர்த்தற்கான ஆதாரங்கள், ஆவணங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். மேலும், கூடுதல் சாட்சியங்களும் உள்ளன. இவைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். எனவே, நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி தரவேண்டும்” என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
“இந்த வழக்கின் விசாரணை நிறைவடையும் நிலையில் உள்ளது. பெரும்பாலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர். விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது அமைப்பின் குறுக்கீடு தேவையில்லை. சட்டப்படியும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல. அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். எனவே, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்கக்கூடாது” என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தரப்பிலும் வாதிடப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கே.ஐயப்பன் இன்று (ஜூலை 3) உத்தரவிட்டார்.