விழுப்புரம்: விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற பெண்களாகிய உங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் சவுமியா அன்புமணி வலியுறுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட குத்தாம் பூண்டி, மூங்கில் பட்டு, விஸ்வரெட்டிப்பாளையம், பகண்டை ஆகிய கிராமங்களில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் 98 சதவீத மதிப்பெண்கள் பெறுவார்கள். அவர்களுக்கு அடிப்படையான பல்வேறு வசதி வாய்ப்புகள் இருக்கும். ஆனால் கிராமப்புறத்தில் நம்மைப் போன்ற விவசாய குடும்பத்தில் பாட்டாளி மக்களின் பிள்ளைகள் படிக்கின்ற மாணவர்கள் அவர்களோடு போட்டி போட முடியாது.
அதற்குத்தான ராமதாஸ் இட ஒதுக்கீடு தேவை என போராட்டங்கள் நடத்தி பெற்றுக் கொடுத்தார். அந்த இடஒதுக்கீட்டிற்காக உயர்நீத்த குடும்பம் வாழ்கின்ற மண் இது. அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிள்ளைகளால் கூட அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற முடியவில்லை. 10.5% இடஒதுக்கீட்டை திமுக தரமுடியாது என சொல்லிவிட்டது.
இந்த இடைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. பெண்களாகிய உங்களுடைய அதிகாரத்தை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். நம்முடைய கூட்டங்களுக்கு பெண்கள் வராமல் தடுக்கின்றனர். இந்த கிராமத்தில் அதையும் மீறி அதிகமான பெண்கள் வந்திருக்கிறீகள்.
நீங்கள் கேட்கின்ற அடிப்படை வசதிகள் கிடைக்கும், 10.5% இடஒதுக்கீடும் கிடைக்கும். அதற்காக உங்கள் செல்வாக்கை நீங்கள் காட்ட வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற நீங்கள் உங்கள் குடும்ப ஓட்டுகளை பிரித்து போடாமல் அனைத்து ஓட்டுகளையும் மாம்பழம் சின்னத்திற்கு போட வேண்டும்” இவ்வாறு சவுமியா அன்புமணி பேசினார்.