புதுடெல்லி: இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியை 140 கோடி மக்களும் மன்னிக்க மாட்டார்கள். 2029 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் வரிசையிலேயே அமரும் என்று மக்களவையில் பிரதமர்மோடி கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 27-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், ஆளும் பாஜக மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்து என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புவதாக கடுமையாக விமர்சித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதில் அளித்தார். அவர் பேசத் தொடங்கியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, கோஷமிட்டனர். மணிப்பூருக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று தொடர்ந்துகுரல் எழுப்பினர். இதனால், அவையில் குழப்பம் நீடித்தது. இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை மக்களவை தலைவர் ஓம் பிர்லா கடுமையாக கண்டித்தார். ‘‘எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச ஒன்றரை மணி நேரம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவை உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காத்தனர். அந்த மரபை எதிர்க்கட்சியினர் கடைபிடிக்க வேண்டும்’’ என்று ஓம் பிர்லா அறிவுறுத்தினார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டனர்.
அமளிக்கு நடுவே பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவது குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் தெளிவாக குறிப்பிட்டார். பல்வேறு முக்கிய விவரங்களையும் எடுத்துரைத்தார். அவருக்கு எனது நன்றி.
கடந்த 1-ம் தேதி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை அவையில் எடுத்துரைத்தனர். இதில் புதிய உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டனர். அவர்களை பாராட்டுகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எவ்வாறு திறம்பட பணியாற்றினோம் என்பது மக்களுக்கு தெரியும். ஏழைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 30 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். இதனாலேயே 3-வது முறையாக சேவையாற்ற நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் சிலருக்கு வருத்தம் இருக்கிறது. தோல்வியை தழுவிய அவர்கள் தொடர்ச்சியாக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
அனைவருக்கும் சமநீதி: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்படங்கு உயர்ந்தது. நாட்டின் நலனை முன்னிறுத்தி மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட்டன. நம் நாட்டில் மிக நீண்ட காலமாக வாக்கு வங்கி அரசியல் நீடித்து வந்தது. இது நாட்டின் வளர்ச்சியை அழித்தது. நாங்கள் ‘சர்வ தர்ம சம பாவ்’ கொள்கையை பின்பற்றுகிறோம். இதன்படிஅனைவருக்கும் சமநீதி கிடைப்பதை உறுதி செய்கிறோம். மத்திய அரசின்திட்டம் கடைநிலை மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம்.
3 மடங்கு வேகத்தில்.. மக்களவை தேர்தலின்போது, ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற லட்சிய கொள்கையை முன்னிறுத்தி மக்களை சந்தித்தோம். மக்களின் ஆதரவால் 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறோம். 3-வது ஆட்சியில் 3 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில்131 ஆண்டுகளுக்கு முன்பு உரையாற்றிய சுவாமி விவேகானந்தர், இந்துக்களின் சகிப்புத்தன்மை குறித்து உலகுக்கு எடுத்துரைத்தார்.
ஆனால், இப்போது காங்கிரஸ் தலைவர்களோ, ‘இந்து தீவிரவாதம்’ என்ற கோஷத்தை எழுப்புகின்றனர்.
இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள், சனாதன தர்மத்தை கொசுவை போல ஒழிக்க வேண்டும் என்கின்றனர். இந்து கடவுள்களை அவமதிக்கின்றனர். இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியை 140கோடி மக்களும் மன்னிக்க மாட்டார்கள். வரும் 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் வரிசையிலேயே அமரும்.
சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினர். இதன்காரணமாக நாடு விடுதலை அடைந்தது. மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர். இப்போது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்டுவோம்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மக்களவைகாலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார். இதன்பிறகு, மாநிலங்களவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் 3 குட்டி கதைகள்: பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசியபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் 3 குட்டி கதைகளை கூறி அவரை விமர்சித்தார். பிரதமர் மோடி கூறியதாவது:
ஒரு சிறுவன் மிதிவண்டி ஓட்டிச் செல்கிறான். அப்போது அந்த சிறுவன் கீழே விழுந்து அழுது புலம்புகிறான். பெரியவர்கள் அந்தஇடத்துக்கு வந்து சிறுவனை சமாதானப்படுத்துகின்றனர். ஓர் எறும்பு உயிரிழந்துவிட்டது. ஒரு பறவை உயிரிழந்துவிட்டது என்று சிறுவனிடம் பெரியவர்கள் கூறுகின்றனர். இதைக் கேட்டு சிறுவன் மகிழ்ச்சிஅடைகிறான். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு இப்போது அவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு சிறுவன் 99 மதிப்பெண்களை பெற்றுவிட்டதாக துள்ளிக் குதிக்கிறான். அவனுக்கு பலரும் வாழ்த்துகளை கூறுகின்றனர். அப்போது சிறுவனின் ஆசிரியர் உண்மையை கூறுகிறார். அந்த சிறுவன்,100-க்கு 99 மதிப்பெண்களை பெறவில்லை.543-க்கு 99 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஒரு குழந்தை, யாரோ தன்னை அடித்து விட்டதாக தாயிடம் கூறி அழுகிறது. ஆனால் அந்த குழந்தைதான் அடுத்த குழந்தையின் புத்தகம், உணவை திருடியது. இதேபோல மக்களவையில் திங்கள்கிழமை சிறுபிள்ளைதனமான நடவடிக்கைகள் அரங்கேறின. அனுதாபத்தை பெற புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில்ஜாமீனில் இருப்பவர், அவையில் அபத்த மான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்