முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய ஆகியோரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தலைமையிலான செயலாளர் குழாம், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் உறுப்பினர்கள், இராஜதந்திர அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகங்கள் உட்பட பாராளுமன்றத்தின் முன்னாள் பணியாட் தொகுதியினர், பாராளுமன்றத்தின் இணைந்த சேவையின் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இன்று பி.ப 2.00 மணிக்கு மறைந்த கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்த போது, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் முன்னணியாகக் கொண்டு, பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதனையடுத்து, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பிரமுகர்கள் அனைவரும் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் குறிப்பையும் பதிவு செய்தனர்.