டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்தது. எனினும், கடைசி நேரத்தில் பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. இதனால், அவர் போட்டியில் விளையாடவில்லை.
இதனால், ஹசன் சாகிப் மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் என்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வங்காளதேச அணி போட்டியை எதிர்கொண்டது. தஷ்கின் போட்டியில் விளையாடாமல் போனது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் நிபுணர்களுக்கும் பெரும் ஆச்சரியம் ஏற்படுத்தியது.
ஆனால், அதற்கு அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் போட்டியில் விளையாடாமல் போனதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
தஷ்கின் அறையில் படுத்து தூங்கி இருக்கிறார். ஆனால், போட்டிக்காக விளையாட எழுந்து வராமல் நீண்ட நேரம் தூக்கத்திலேயே இருந்துள்ளார்.
இதனால், அணி வீரர்களுக்காக தயாராக இருந்த பஸ்சில் அவர் ஏறவில்லை. சரியான நேரத்திற்கு வராத சூழலில் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அணி நிர்வாகமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அணிக்கான ஓட்டலிலேயே, அணியின் அதிகாரி ஒருவர் தங்க நேர்ந்தது.
இதன்பின்னர் அகமது, பஸ்சை தவற விட்டதற்காக சக வீரர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். எனினும் அவரை இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வைக்க வேண்டாம் என்று அணியின் பயிற்சியாளர் முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அணியின் அதிகாரி ஒருவர் கூறும்போது, அணியில் விளையாடாதது பற்றி தலைமை பயிற்சியாளரான சண்டிகா ஹதுருசிங்காவே பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஒரு பெரிய விசயம் ஆக்க வேண்டிய தேவையில்லை. அவருக்கும், பயிற்சியாளருக்கும் எந்த விவகாரமும் இல்லை. அப்படி இருந்திருக்கும் என்றால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் எப்படி விளையாடியிருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட் போன்ற முக்கிய போட்டியில் அசதியிலோ அல்லது வேறு காரணத்தினாலோ குட்டி தூக்கம் போட்டு ஓட்டல் அறையிலேயே மூத்த வீரர் ஒருவர் படுத்து கொண்டு, விளையாடாமல் போன விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.